காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவை ஆதரிக்கும்படி ஆபரேஷன் கமலா நடத்தியது உண்மைதான் – பாஜக அமைச்சர் சதானந்த கெளடா

0
312

கர்நாடக மக்களின் நலனுக்காகவே ஆபரேஷன் கமலாவை செயல்படுத்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவுக்கு வருமாறு அழைத்தோம் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கெளடா ஒத்துக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவை ஆதரிக்கும்படி ஆபரேஷன் கமலா நடத்தியது உண்மைதான். ஆனால், இதை மாநில மக்களின் நலனுக்காகவே செய்தோம். கூட்டணி அரசு எதிராக அதிருப்தி அடைந்திருந்த, பாஜகவில் இணைய விருப்பமுள்ள எம்எல்ஏக்களை மட்டும் பாஜகவுக்கு வருமாறு அழைத்தோம். மக்களின் நலனை கருத்தில் கொண்டு இதை செய்ததில் தவறொன்றுமில்லை. கர்நாடகத்தில் நீண்ட நாள்களாக நடைபெற்றுவந்த அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது.

கூட்டணி அரசு கவிழ்ந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர். அதிகாரத்திற்காக மஜத, காங்கிரஸ் தலைவர்கள் நடத்தி வந்த நாடகத்தை கண்டு மக்கள் அதிருப்தியடைந்திருந்தனர். இதன்காரணமாகவே இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.


 மாநிலத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அமைந்ததும், நாங்கள் அமைதியாகிவிட்டோம். ஆனால், இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவர்மீது ஒருவர் சேற்றைபூசிக் கொண்டு மோதலில் ஈடுபட்டதால், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் முடங்கின. இதற்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும் என்பதால்தான் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை வீழ்த்த முடிவு செய்தோம்.


 பாஜகவின் ஆபரேஷன் கமலாவால் மட்டுமே கூட்டணி அரசு வீழ்ந்ததாகக் கூற முடியாது. சித்தராமையாவின் கோஷ்டி, மஜதவின் உள்கட்சிபூசல் போன்றவையும் அரசு கவிழ காரணமாக இருந்தன. பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்து, மக்களுக்கு ஊழற்ற, வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்லாட்சி நடைபெறும் என நம்பிக்கை இருக்கிறது என்றார்.