சிடிஎஸ் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதன் மூலம் தமிழர்களுக்கு அதிமுக அரசு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

புகழ்பெற்ற சி.டி.எஸ் நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெற 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற அ.தி.மு.க அரசு; தமிழகத்தை நாசமாக்கியதோடு, உலக அரங்கில் வாழும் தமிழர்களுக்கும், அமெரிக்காவில் உள்ள தமிழர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், சென்னையில் உள்ள காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (CTS) எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கட்டிடம் கட்டுவதற்கும், சிறுசேரியில் கட்டிட அனுமதி, மின்சார இணைப்பு வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு ரூ.26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கு, அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்திற்கு உலக அரங்கில் அழிக்க முடியாத பெரும் அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனம் 2.7 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டிடம் கட்டுவதற்கு, கட்டிட அனுமதி பெறுவதற்காக, அ.தி.மு.க அரசில் உள்ள அதிகாரிகள் கேட்டுப்பெற்ற இந்த லஞ்சத்திற்கு, அந்நிறுவனத்திற்கு இடையில் நடக்கும் வீடியோ கான்பிரன்ஸ் ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த 26 கோடி ரூபாய் ஊழல் ஆதாரங்களின் அடிப்படையில் சி.டி.எஸ் நிறுவனத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் வழக்கு தொடரப்பட்டு அந்த அதிகாரிகள் மீது கூட்டுச்சதி, ஊழல், மற்றும் பொய்யான ஆதாரங்களைத் தயாரித்தது போன்ற மிகக் கடுமையானதும் மோசமானதுமான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை அந்தத் தனியார் நிறுவனம் ஒப்புக்கொண்டு விட்டது. அதனடிப்படையில் சி.டி.எஸ் நிறுவனத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க அரசின் இந்த இமாலய ஊழல் 2012 முதல் 2016ஆம் ஆண்டிற்குள் நடைபெற்றதாக வீடியோ கான்ஃபரன்ஸ் ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் இந்த ஊழல் நடைபெற்றதாகக் கருத முடியாது. அமைச்சர்களுக்கும் பங்கிருக்கலாம்.

ஆகவே, தமிழக அரசின் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை, உடனடியாக ஊழல் வழக்கினைப் பதிவு செய்து, சி.பி.ஐ மற்றும் இன்டர்போல் உதவியை நாடி, அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் தாமதமின்றிப் பெற வேண்டும். அந்த வழக்கில் தாக்கலாகியுள்ள வீடியோ கான்ஃபரன்ஸ் ஆதாரங்களையும் பெற வேண்டும். ஊழல் ஆதாரங்களின் அடிப்படையில் சென்னை மற்றும் சிறுசேரி ஆகிய இடங்களில் சி.டி.எஸ் நிறுவனத்தின் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் சிறைத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here