காக்கைகளைக் கொண்டாடி பாமா ஒரு கதை எழுதியிருந்தார்; மர அச்சு ஓவியக் கலைஞர் விஜய் பிச்சுமணியின் கண்காட்சி காக்கைகளைக் கொண்டாடி திருவிழாவே நடத்தியிருக்கிறது. அவருடைய கண்காட்சிக்குள் நுழைந்தவுடன் தேசிய விருது பெற்ற “இருளுக்குள் விழித்திருக்கும் நாய்” படம் இடம்பெற்றிருக்கிறது. விவசாயக் குடும்பம் ஒன்றில் நாயின் பிரதான பாத்திரத்தை, நாய்க்கும் வீட்டுக்குமான உறவை பல அடுக்குகளாக சொல்கிற சித்திரம் இது. மோந்து பார்த்து உறவை அறியும் அதன் பண்பு, இரவில் விழித்திருந்து வீட்டைக் காக்கும் அதன் பாங்கு என்று பன்முக ஓவியமாக இது மன ஆழங்களுக்குள் நுழைந்து செல்கிறது.

ஆறு வருடங்களாக சென்னையில் கவின்கலைக் கல்லூரியில் படித்து முதுநிலைப் பட்டம் வாங்கிய பிறகு ஊருக்குப் போய் குடும்பத்தோடு விவசாயம் பார்த்திருக்கிறார் விஜய்; அப்போது பழகிய காக்கைகளின் நினைவுகளோடு மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார். இங்கு கிரீம்ஸ் சாலை லலித் கலா அகாடமியில் காக்கைகளோடு பரிச்சயம் உண்டாகிறது. காக்கைகள் எப்படி ஒற்றுமையாக இருக்கின்றன, அவை எப்படி துப்புரவுப் பணியாளர்களாக இருக்கின்றன, அவற்றின் ஒலி என்னவாக இருக்கிறது என்று படிமம் படிமமாக விரிந்து செல்கின்றன விஜயின் படைப்புகள்.

இரவில் திடீரென்று கண்ணில் படும் ஆந்தை எவ்வளவு பிரம்மாண்டமான மனச்சித்திரமாக தோற்றம் கொள்கிறது, பெரும் நடுக்கத்தைத் தரவல்லதாக இருக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒலி என்பது அலையாக மட்டுமில்லை, எங்கும் வியாபித்ததாக இருக்கிறது என்பதை உருவப்படுத்த விஜய் பெரும்பாலான படங்களில் மெனக்கெடுகிறார்; சப்தத்திற்குப் பேராழம் இருக்கிறது, அது முடிவுறாத பிரயாணத்தை மேற்கொண்டிருக்கிறது என்று நம்புகிறார்.

கல்லூரிப் பெண்களால் நிறைந்திருக்கும் ஷேர் ஆட்டோக்களில் சக பயணியாக வந்த தருணங்களைச் சட்டகத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்; பனம்பூவின் பேரழகைப் படமாக்கி கலைஞர்கள் மண்ணின் அசல் சுவையை உலகப் பேரனுபவமாக்க முடியும் என்று நிறுவியுள்ளார் விஜய். தச்சமலையில் நிலவைக் கீழாகவும் யானைகளை மேலாகவும் பார்த்த கணத்தைப் பதிவு செய்திருக்கிறார். கறுப்பு வெள்ளையில் கனமான செய்திகளைப் பகிர முடியும் என்று நம்பிக்கையளிக்கும் இந்தக் கண்காட்சி சென்னை லயோலா கல்லூரிக்கு எதிரிலுள்ள ஸ்டெர்லிங் சாலையில் ஆர்ட் ஹவுசில் அக்டோபர் 31 வரை இடம்பெறுகிறது. சிறந்த அனுபவத்தைப் பெற நேரில் சென்று பாருங்கள்.

BODY, SPACE AND SENSES

புதிய பாடநூல்கள்: கொஞ்சம் பாய்ச்சல், கொஞ்சம் சறுக்கல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here