காஃபி டே நிறுவன அதிபர் வி.ஜி.சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு

0
326


காஃபே காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தா நேற்று மாயமான நிலையில், இன்று அவரது உடல்  நேத்ராவதி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், கஃபே காஃபி டே உரிமையாளருமான சித்தார்த் பெங்களூரு சதாசிவ நகரில் வசித்து வருகிறார்.  ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவுக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு காரில் சென்றுள்ளார்.  அவருடன், ஓட்டுநர் பசவராஜ் பாட்டீல் மட்டும் இருந்துள்ளார்.  

சக்லேஷ்புராவுக்குச் சென்ற பிறகு அங்கிருந்து மங்களூருக்குச் செல்லுமாறு ஓட்டுநரிடம் கூறிய சித்தார்த்,  பண்டுவால் அருகே உள்ள நேத்ராவதி ஆற்றின் பாலம் அருகே காரை நிறுத்துமாறு கூறியுள்ளார். 

அதன்பிறகு காரிலிருந்து இறங்கிய சித்தார்த், 5 நிமிடங்களில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றாராம்.  நீண்ட நேரமாகியும் அவர் வராததையடுத்து, கார் ஓட்டுநர் பசவராஜ் பாட்டீல் போலீஸாரிடம் புகார் அளித்தார்.  இதனிடையே, சித்தார்த் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்,  நேத்ராவதி ஆற்றில் திங்கள்கிழமை இரவிலிருந்து தீயணைப்பு வீரர்கள்,  பேரிடர் மீட்பு படையினர்,  மீனவர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.  அவர் எங்கும் கிடைக்காத நிலையில், அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், ஒன்றரை நாட்களாக தேடுதல் பணி நடந்து வந்த நிலையில் சித்தார்த்தா உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் கஃபே காஃபி டேவைத் தொடங்கிய சித்தார்த்தின் குழுமத்தில் தற்போது பல ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.  

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான இவருக்கு கடன் இருந்ததாகவும், வருமான வரித் துறையினர் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.  இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here