(ஜனவரி 6, 2017இல் வெளியான செய்திக் கட்டுரை மீள் பிரசுரமாகிறது.)

சென்னை அண்ணா நகரிலிருந்து செங்குன்றத்துக்குப் போற ரோட்டில நேர வந்தா லூகாஸ் டிவிஎஸ் மேம்பாலம் வரும்; பாலத்துக்கு மேல ஏறி அப்படியே வலதுபுறமா திரும்பினா நாதமுனி தேட்டர் வரும்; தேட்டரிலேருந்து அப்படியே நேர போனா கொஞ்ச தூரத்துல சிக்னல் வரும்; சிக்னல்லேருந்து லெப்ட் எடுக்காம ரைட் எடுத்து நியூ ஆவடி ரோட்டுல நேரா போனா ஐசிஎப் ஸ்டாப்பிங் தாண்டுனதும் ஒரு பெரிய ஆல மரம் வரும்; அந்த ஆலமரத்துல குருவிகளும், காக்காகளும் கத்திக்கிட்டு இருக்கும். அந்த ஆலமரத்துக்குக் கீழ கய்யுல மண்வெட்டியும் பாண்டும் கூடையுமா சுமார் ஐநூறு பேர் உக்காந்திருப்பாங்க; நகரத்தில எந்தப் பகுதியில கட்டட வேலை நடந்தாலும் இந்த ஆலமரத்து வாசிகள்தான், மேஸ்திரியும், கொத்தனாரும், சித்தாளுமா வேலை செஞ்சிகிட்டு இருப்பாங்க. சுத்து வட்டாரத்துல இருக்குற தினக்கூலி தொழிலாளிங்கல்லாம் ஒண்ணு கூடுற இடந்தான் இந்த ஐசிஎப் ஆலமரம்.

சென்னையில எந்த வேலைக்கு ஆள் வேணுன்ணாலும், இந்த ஆலமரத்துக்கு வந்தா ஆள் கிடைக்கும்; அந்த அளவுக்கு பேமஸானது இந்த ஐசிஎப் ஆலமரம். பல வருஷமா கூலித் தொழிலாளர்கள் இங்க கூடுறது வழக்கமா இருந்துகிட்டு வர்றத கேள்விப்பட்டு அவங்களயெல்லாம் சந்திக்கிறதுக்குப் போயிருந்தேன்; ஐசிஎப் ஸ்டாப்பிங்ல இறங்கி சுத்தி முத்தும் பாத்தேன். சரியா தெரியல,,, பக்கத்துல இருக்குற டீக் கடையில டீ குடிச்சிகிட்டே விசாரிச்சேன். அவர் ’’அட என்ன சார் நீங்க காலைல ஏழு மணிக்கெல்லம் வந்தாதான் அவங்கள பாக்க முடியும். இப்ப மணி ஒம்பது ஆகுது. அதோ முத்துமாரியம்மன் கோயில் தெரியுதே அதுக்குப் பின்னாடி போய் பாருங்க’ன்னு சொன்னார். அவர் சொன்ன இடத்துல போயி பாத்தேன். நான் போயி பாத்தப்ப வெறும் அம்பது பேர்தான் அங்க இருந்தாங்க. அவங்களும் ரொம்ப சோகமா இருந்தாங்க. அங்க உக்காந்திருந்த திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்த ஜனார்த்தனன் மேஸ்திரிய சந்திச்சேன்.

இதையும் படியுங்கள்: தினமும் 25 ரூபாய் சம்பாதிக்க முள் காயம் படும் வீரம்மா

இந்த ஆலமரத்துல ஐநூறு பேர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன்; இங்க வந்து பாத்தா அம்பதுபேர்கூட காணோமே’’ன்னு கேட்டேன்; ஆமாங்க சார் காலைல வந்து பாத்தீங்கண்ணா கொத்தனாரு, சித்தாளு, பெரியாளு, மரம் வெட்டுறவன், குழி தோண்டுறவன், துணி தைய்க்குறவன், துணி தேய்க்குறவன், சாக்கடை அள்ளுறவன், எல்லாருமே இங்க இருப்பாங்க. சிட்டில இருக்குறவங்க தேவையான வேலைக்கு இங்கிருந்து ஆளுங்களைக் கூட்டிட்டுப் போவாங்க. ஆனா இப்ப ரெண்டு மாசமா வேலையே இல்லாம பாதிப்பேரு அவங்க அவங்க ஊருக்குப் போயிட்டாங்க; மீதிபேரு அங்கங்கே வேலை தேடி சுத்திகிட்டு இருக்காங்க. என்ன பண்றது மோடிக்கு ஓட்டு போட்டு மோசம் போயிட்டோம் சாமி’ன்னார். எனக்கு ஒண்ணுமே புரியல……’’கொஞ்சம் விவரமா சொல்லுங்க’ன்னேன். மோடி ஆயிரம் ரூபாய், அய்நூறு ரூபாய் எல்லாம் இனிமேல் செல்லாதுன்னு சொல்லி எங்க பொழப்புல மண்ணள்ளிப் போட்டுட்டாரு… அதுவரைக்கும் நல்லா வேலை இருந்துச்சு சார்… இப்பல்லாம் யருமே எங்கள வேலைக்குக் கூப்பிடறதில்ல. யாருகிட்டேயும் பணப்புழக்கம் இல்ல; பாருங்க இங்க இருக்குற குடிசை வீடுங்களை (சுமார் 500 வீடுகள் நியூ ஆவடி ரோட்டில் இருக்கிறது); இதுல இருக்குறவுங்க எல்லாருமே அன்றாடங் காச்சிங்கதான் ’’கைய்யில காசு…. வாயில தோச’’ன்னு அன்னன்னைக்கு வேலைக்குப் போனாத்தான் கூலி. இப்ப ரெண்டு மாசமா வேலையில்லை. குழந்த குட்டிய வச்சிருக்கவுங்க எப்படி பொழக்க முடியும்.‘’ பணக்காரங்க இந்த ரோட்டுல காருல போறத பாத்தா அவங்களுக்கெல்லாம் எப்படி காசு கெடைக்குதுன்னு ஆச்சிரியமா இருக்கு.

இந்தப் பகுதியில் வாழும் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் பண மதிப்பிழப்பு பற்றி மிகவும் தெளிவான கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள்; அதை இங்கே பதிவு செய்கிறேன்.

கன்னியப்பன்:

அம்பத்தூர்ல இருக்குற மேனாமேட்டுல ஒரு அப்பார்டுமென்டுல கொத்தனார் வேல பாத்துக்கிட்டு இருந்தேன் சார். வாரம் சனிக்கிழமைன்னா டான்னு சம்பளம் வந்துரும். இப்ப உன்னோட பேங்க் அக்கோண்டு நம்பரக் குடு; சம்பளத்தை பேங்குலதான் போடுவோமுன்னு சொல்லிட்டாங்க. ஒரு மாசமா சம்பளம் வரல. கேட்டா ஒன்னோட பேங்க் கணக்குல போட்டாச்சு. நீ சம்பளத்த பேங்குல எடுத்துக்கோனு சொல்றாங்க. பேங்குல போய் ஒரு நாள் பூரா நின்னா நாலாயிரம் ரூபா தாராங்க. இந்த நாலாயிரத்த எடுக்குறதுக்கு எழுநூறு ரூபா சம்பளத்தை இழக்க வேண்டியிருக்குது. சம்பளம் குடுக்க பணமில்லாம இப்ப கட்டட வேலய நிறுத்தி வச்சிருக்காங்க. எங்கயும் வேல இல்ல. என்ன பண்றதுன்னு தெரியாம உக்காந்திருக்கோம்.

பச்சையம்மாள்:

சித்தாள் வேலைக்குப் போயிகிட்டிருந்தேம்பா. வீட்டுகாரருக்கு ஒடம்பு சரியில்லாம படுத்திருக்கார். தெனமும் அவருக்கு ஒரு கோட்டரு குடிக்கணும். இல்லாட்டி கை காலெல்லாம், ஆட்டம் கொடுத்துரும். தண்டலுக்குப் பணம் வாங்கி செலவு பண்ணிக்கிட்டு அத கெட்டுறதுக்கு கஷ்டபட்டுக்கிட்டு இருக்கோம். எங்கள மாதிரி கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்’

ரமேஷ் (ஆட்டோ ஓட்டுனர்):

வாடகை ஆட்டோ ஓட்டுறேன் சார். முன்னாடில்லாம் காலையில எட்டு மணிலேருந்து நைட்டு ஏழு மணிவரைக்குத் தெனமும் 1500 ரூபாய்க்கு ஆட்டோ ஓட்டுவேன் சார். ஆட்டோ வாடகை, ஆட்டோக்கு பெட்ரோல், எனக்கு பெட்ரோல் எல்லாம் போக டெய்லி 700 ரூபா வீட்ல குடுத்துருவேன். நல்ல வருமானம் வந்துகிட்டு இருந்துச்சு. இப்ப வருமானமே இல்ல. நைட்டு பத்து மணிவரை சவாரி போனாலும் 500 ரூபா கெடைக்க மாட்டங்குது. நா படிக்கல. என்னோட பசங்க நல்லா படிக்கணுமுன்னு இங்க்லீஸ் மீடியத்துல சேத்துருக்கேன். ரெண்டு மாசமா பீஸ் கட்டல …. ஸ்கூல்ல வந்து பிரின்சுபால பாக்கச் சொல்லி பசங்க டயரில எழுதி அனுப்பிருக்காங்க. நம்ம கஷ்டத்த அவங்ககிட்ட சொல்ல முடியுமா?

இதையும் படியுங்கள்: பயிர் இல்லைன்னா எங்க உயிர் இல்ல: செத்து மடியும் விவசாயிகள்

ராஜேந்திரன் (குடியிருப்புப் பகுதி தொழிற்சங்கப் பிரதிநிதி):

இந்த நியூ ஆவடி ரோடு மட்டுமில்ல; இதச் சுத்தியிருக்கிற வில்லிவாக்கம், அயனாவரம், பெரம்பூர், கெல்லீஸ்ன்னு சுத்து வட்டார தினக்கூலிக்காரங்க ரொம்பவே திண்டாடிக்கிட்டு இருக்குறாங்க. அம்பது நாள் பொறுத்திருந்து பாருங்கள் என்று சொன்ன மோடி , எழை எளிய மக்களின் வயித்தெரிச்சலிலிருந்து புரொமோசனாகி நடுத்தர மக்களின் சாபத்தை இப்போது தொட்டிருக்கிறார். இது மேல்தட்டு மக்களைத் தொடுவதற்குள் சுதாரித்துக் கொள்வார் என்று நினைக்கிறோம்.

அதே பகுதியில் மளிகைக் கடை வச்சிருக்கிற அண்ணாச்சி:

இந்தப் பகுதி மக்கள் எல்லாருமே வேலைக்குப் போறவங்க சார். வேலைக்குப் போறவங்க எல்லாருகிட்டேயும் நல்ல பணப்புழக்கம் இருந்துச்சு; ஆனா இப்ப ரெண்டு மாசமா இந்த மக்கள் சிரமப்படுறத பார்த்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார். குழந்தைகளுக்குப் பால் வாங்ககூட காசில்லாம தவிக்குறாங்க. இந்த மாதிரி ஏழை மக்களை துன்பப்படுத்திதான் நம்ம நாட்ட வல்லரசு ஆக்கணுமுன்னா நாம சுதந்திரம் வாங்காமலே இருந்திருக்கலாமேன்னு தோணுது சார். பதவில இருக்குறவுங்க சட்ட திட்டங்கள போடுறதுக்கு முன்னாடி நம்ம நாட்டுல எவ்வளவு ஏழை மக்கள் இருக்காங்கன்னு பாக்கணும். பண முதலைகளை வாழ வைக்குறதுக்காக ஏழை மக்களை வதைக்கும் மோடியின் யுக்தி சரியில்லை. கண்டிப்பாக மோடி இதுக்கெல்லாம் ஒரு நாள் வருந்துவார்.

இதையும் படியுங்கள்: இந்த மாதிரி பஞ்சத்த நாங்க பாத்ததில்ல

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here