தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன் முழுவதையும் தமிழக அரசே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர், மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் லெனின் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெற்ற கல்விக் கடனை, கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கி கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கி, மாணவர்களுக்கு வழங்கி உள்ள கல்விக் கடன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 45 சதவீத மதிப்பிலான விலைக்கு விற்பனை செய்துள்ளதால், வங்கியில் கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு கடனை கட்டுமாறு ரிலையன்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பி வருவதாக தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி, கடனை வசூலிக்க அடியாட்களை பணியாளர்களாக சேர்த்து, மாணவர்களையும், அவர்தம் பெற்றோரையும் மிரட்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசுத்துறை வங்கிகளின் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இல்லையேல் லெனின் போன்ற மாணவர்களின் தற்கொலை தொடர்கதையாகிவிடும் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

vaiko11

பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று பல இலட்சக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்துள்ள பெரு நிறுவனங்களான ரிலையன்ஸ், ஜி.எம்.ஆர்.அதானி, லான்கோ, ஜேய்பி மற்றும் வேதாந்தா உள்ளிட்ட பத்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிவில்லாத வங்கிகள், எளிய விவசாயிகளையும், கல்விக்கடன் பெற்ற மாணவர்களையும் துன்புறுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

மதுரை மாணவர் லெனின் தற்கொலைக்குக் காரணமான வங்கி மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாணவர் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்