கலைஞரின் பிறந்தநாளன்று மோடியின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தனது தேர்தல் பிரச்சாரத்தை கருணாநிதி பிறந்த திருவாரூர் மண்ணில் தொடங்கினார். காலை திருவாரூர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தி.மு.க மற்றும் நாகை நாடாளுமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு வாக்குகளைச் சேகரித்தார்.

பின்னர், அந்தப் பகுதியில் நடைபெற்ற மகளிர் கருத்து கேட்பு கூட்டத்திலும் கலந்துகொண்டு மகளிரின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நடைபெற்ற பிரச்சார தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது …

தேர்தல் களத்தில் என்னுடைய பிரச்சார பயணத்தை முதற்கட்டமாக நான் இந்த திருவாரூர் தொகுதியில் தொடங்கி இருக்கிறேன். ஏனென்றால் இது தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்தியாவுக்குத் தலைநகர் டெல்லி. தமிழ்நாட்டுக்குத் தலைநகர் சென்னை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தலைநகர் இந்தத் திருவாரூர். காரணம் தலைவர் கலைஞர் அவர்களை ஈன்றெடுத்த ஊர் இந்த ஊர். பள்ளி மாணவனாக நம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திட வேண்டுமென போர்ப்பரணி பாடிய தலைவர் கலைஞர் பிறந்த ஊர் இந்த ஊர்.

மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியின் கெடு வருகிற ஜூன் மாதம் 3ம் தேதி முடிவடைகிறது. தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி. எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது என்பதை நாம் மறைத்திட மறுத்திட முடியாது.

இதே திருவாரூரில் தான் தலைவர் அவர்கள் இறுதியாகப் போட்டியிட்டார்கள். நியாயமாக திருவாரூரில் வாக்கு கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. இருந்தாலும் நீங்கள் கேட்பீர்கள், நம்ம ஊர் பிள்ளை ஊர் ஊராக சுற்றுகிறது, நம்ம ஊருக்கு வரவில்லையே என நீங்கள் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான், நான் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.

பூண்டி கலைவாணன் அவர்கள் திருவாரூர் சட்டமன்றத்தின் வேட்பாளராக நிற்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கதிர் அருவாள் சின்னத்தில் தோழர் செல்வராஜ் அவர்கள் நாகை நாடாளுமன்ற வேட்பாளராக நிற்கிறார். செல்வராஜ் அவர்களும், பூண்டி கலைவாணன் அவர்களும் உருவத்தால் மாறுபாடு கொண்டிருக்கலாம். ஆனால், உணர்வால் அவர்கள் ஒன்றுபட்டவர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகள். நான் சகோதரன் சகோதரன் என்று சொல்வதால் அவர்கள் கலைஞரின் பிள்ளைகள் என்று சொன்னாலும் தவறில்லை. ஆகவே, இந்த சகோதரர்களுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

மத்தியிலே நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாசிச மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும், ஆனால், அதேநேரத்தில் மாநிலத்தில் நடைபெறக்கூடிய மத்திய அரசினுடைய கொத்தடிமையாக எடுபிடியாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எடப்பாடி ஆட்சியையும் சேர்த்து விரட்டிட விடை காண வேண்டும் என்ற உணர்வோடு நான் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்

துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய ஓ பன்னீர் செல்வம் தலைமையில் பதினொரு சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஆட்சி இருக்கக் கூடாது என்று சட்டமன்றத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தவர்கள். ஆனால் அவர்களுடைய பதவி இன்றைக்கும் இருக்கிறது. இதுதான் வேடிக்கை. ஆகவே, அந்த பிரச்னையும் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. விரைவில் தீர்ப்பு வரப் போகிறது. அப்படி வருகிற நேரத்தில் உறுதியாகச் சொல்லுகிறேன். அந்த தீர்ப்பு வரக்கூடிய நேரத்தில் இந்த 18 தொகுதிகளின் முடிவுகளும் வரப்போகிறது. அப்போது மோடி ஆட்சி மட்டுமல்ல தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியும் அகற்றக்கூடிய நிலை வரும். வந்தே தீரும். ஆகவே தான், நீங்கள் இந்த தேர்தலை சிறப்பான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உங்களை கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்தி காட்டுவேன் என்று சொன்னாரே மோடி, செய்து காட்டினாரா?

இந்தியாவின் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவேன் என்று சொன்னாரே மீட்டுக் கொண்டு வந்தாரா?

அப்படி மீட்டுக் கொண்டுவருகிற கருப்பு பணத்தை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அவருடைய வங்கிகளில் வைப்புத் தொகையாக 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன் என்று சொன்னாரே, செய்தாரா?

இதுவரைக்கும் அந்த உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை. இரண்டு கோடி இளைஞர்களுக்கு படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் என்று சொன்னாரே, செய்தாரா? இப்போது அதேபோல் தேர்தல் வந்து விட்ட காரணத்தினால் சொல்லத் தொடங்கியிருக்கிறார். அண்மையில் தமிழ்நாட்டிற்கு இரண்டு மூன்று முறை வந்து சென்றுவிட்டார்.

அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார். ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்து முடிகின்ற நேரத்தில் இப்பொழுதுதான் அவர் அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்கு. முதலமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் மீது வழக்கு. இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சி. இன்றைக்கு இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு ஒரு கூட்டணி அமைத்து இருக்கிறார்கள் என்று சொன்னால் மக்களை ஏமாற்றுவதற்காகவும் ஊழல் செய்வதற்காகவும்தான் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here