கலைஞர்

(ஆகஸ்ட் 8, 2018இல் வெளியான கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது)

கிண்டியிலிருந்து மதியம் ஒரு மணிக்குப் புறப்பட்டான் அந்தத் தொண்டன்; இரண்டு மணிக்குள் வீட்டில் சாப்பாடு ரெடியாகி விடும்; ஆனால் வீட்டுச் சாப்பாட்டை முடித்துவிட்டு புறப்பட்டால் தலைவன் கலைஞரின் திருமுகத்தைப் பார்க்காமல் போய்விடுவோமோ என்றொரு கவலை. ரயில் நிலையத்துக்கு நடந்து செல்லும் வழியில் எந்தக் கடைகளும் திறக்கவில்லை; வெயிலும் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. பாக்கெட்டில் 30 ரூபாய் இருக்கிறது. எதிரில் அம்மா உணவகம் மட்டும் திறந்திருக்கிறது. அஞ்சு ரூபாவுக்கு கருவேப்பிலை சாதம் சாப்பிட்டுவிட்டு மேலே நடந்தான் அந்த 45 வயது தொண்டன். ரயில் நிலையத்தில் சிந்தாதிரிப்பேட்டை ரிட்டர்ன் டிக்கெட்டை பத்து ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டு ஒரு பெஞ்சில் வந்து அமர்ந்தான்.

ரயில் நிலையக் குடிநீர்க் குழாயில் சிறிதாக தண்ணீர் அருந்திவிட்டு மறுபடியும் பெஞ்சில் உட்கார்ந்தான். இரண்டு பேர் தாகம் தீர நிறையவே தண்ணீர் குடித்துவிட்டு அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள். ”வழியில எங்கேயும் தண்ணி கிடைக்கல” என்கிறார் அதில் பெரியவர். ”பார்த்தீங்களா? இதுதான் கொந்தளிப்புங்கிறது. ஜெயலலிதா இருந்தாகூட அண்ணா சமாதில இடம் கொடுத்திருக்கும்; மோடி செஞ்ச குசும்ப பாத்தீங்களா? கடைசில நம்மதான் ஜெயிச்சோம்” என்றார் அந்தப் பெரியவர். அவன் பலமாக தலையாட்டிவிட்டுப் புன்னகைத்தான். ”இறுதிவரை போராடு” என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்த தலைவனின் முகம் மனதில் நிழலாடியது.

ரயில் வந்தது; பேருந்துகள் இல்லாததால் கூட்டம் அலைமோதியது. இருந்தாலும் தொண்டனுக்கு உட்கார இடம் கிடைத்தது. சைதாப்பேட்டை ரயில் நிலையத்திலும் கிண்டியைப் போலவே கடைகள் அடைக்கப்பட்டிருந்தன; மாம்பலத்தில் ஓர் உணவுக் கடை திறந்திருந்தது. கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் உணவுக் கடை மட்டுமல்ல; புத்தகக் கடையும் திறந்திருந்தது; ”இந்தக் கடைக்காரன்தான் என்னைப் போன்ற தொண்டனின் மனநிலையைப் புரிந்துள்ளான்” என்று நினைத்துக்கொண்டான். பஸ்கள் ஓடாததால் பல திமுக தொண்டர்கள் முதல் முறையாக அந்த ரயிலில் பயணம் செய்கிறார்கள். பலரும் எப்படி ராஜாஜி ஹாலுக்குப் போவது என்று இந்தத் தொண்டனிடம் கேட்டார்கள். ”நானும் அங்கேதான் போறேன்; பார்க்கில் இறங்கி பறக்கும் ரயில் ஏறினா முதல் ஸ்டேஷன் சிந்தாதிரிப்பேட்டை; அங்கேருந்து அஞ்சு நிமிஷத்துல ராஜாஜி ஹால் போயிரலாம்” என்றான் தொண்டன்.

பார்க் டவுன் பறக்கும் ரயில் ஸ்டேஷன் நிரம்பி வழிந்தது; ஜி.சேகர் என்கிற போலீஸ்காரர் கோபத்துடன் இவனோடு பேசினார். “அந்தப் பொண்ணு பாவம்; கூட்டத்துல நாலு பேர் சேர்ந்து அவ மேல விழுறானுக; இவனுகள எல்லாம் இழுத்து வச்சு நறுக்கிரணும். வீட்டில உள்ள பொண்ணுகளுக்கு இப்படி ஒன்னு ஆனா ஏத்துப்பானுகளா? கடுமையா எச்சரிச்சிருக்கேன்” என்றார். எல்லோரும் இந்தத் தொண்டனையும் போலீஸ்காரரையும் ஒரு மாதிரி பார்த்தார்கள். நிலைமையைப் புரிந்துகொண்ட தொண்டன் “அய்யா, சூப்பர்; கூட்டத்துலயும் கட்டுப்பாடா இருக்கிறதுதான நேர்மை” என்றான். அவர் கோபம் சற்றே தணிந்தது. அதற்குள் ரயிலும் வந்தது. சில நிமிடங்களில் சிந்தாதிரிப்பேட்டையில் இறங்கினான் தொண்டன்.

வீதியெங்கும் கூட்டமாக இருந்தது; ஒரு டாடா குட்டி வேனிலிருந்தபடி தண்ணீர் பாக்கெட்டுகளை வீசியெறிந்தபடி திமுக கொடியேந்திய தொண்டர்கள் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு பாக்கெட்டை சரியாக கேட்ச் பிடிச்ச இந்தத் தொண்டன் தண்ணீர் தாகத்தைத் தணித்தான். திமுக பெரியவர் ஒருவர் அந்த வேனை நிறுத்தி, “தண்ணியை வீசியடிக்காதீங்க; சிலது கீழே விழுந்து வீணாகுது. நிறுத்தி வினியோகம் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டுப் போனார். ஒருவர் மாலைமலர் சிறப்புப் பதிப்பைக் கூவி விற்றுக்கொண்டிருந்தார். சிலர் அதனை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரத்துல இந்தத் தொண்டன் பெரியார் சிலையைத் தாண்டி ராஜாஜி ஹாலிலுள்ள பொதுமக்கள் நுழைவாயிலுக்குள் சென்றான். தள்ளுமுள்ளுகளைத் தாண்டி இந்தத் தொண்டன் தலைவனது திருமுகத்தை சற்று தொலைவிலிருந்து தரிசனம் செய்யவே நாற்பது நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. ”சூத்திரப் பட்டம் கட்டப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட பெருவாரியான மக்களுக்கு அரசியல் விடுதலை பெற்றுத் தந்த அண்ணாவின் தம்பிக்காக இன்னும் அரை மணி நேரம்கூட காத்திருக்கலாம்” என்று நினைத்தான் இந்தத் தொண்டன்.

அப்படியே சிவானந்தா சாலைக்குள் நுழைந்து நடந்தான் தொண்டன்; வழியெங்கும் குடிநீர்த் தொட்டிகளையும் கழிவறைகளையும் பார்த்தான். ”திராவிட அரசு ஒன்றுதான் இதைச் சரியாக ஏற்பாடு செய்திருக்க முடியும்; அதற்கு வித்திட்டவர்களும் அண்ணாவும் அவர் தம்பியும்தானே; எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இவர்களது தொடர்ச்சிதானே” என்று எண்ணிக் கொண்டே தற்காலிக கழிப்பறை ஒன்றில் மூத்திரம் பெய்தான். பதினைந்து நிமிடம் நடந்து அண்ணா சமாதியை எட்டியபோது பரவசம் தொற்றிக் கொண்டது; ”குலாப் ஜாமுனுக்கும் தயிர் வடைக்கும் அடுத்தபடியாக நம் தலைவன் கேட்டது அண்ணாவுக்கு அருகில் ஆறடி மண். அதையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்கிவிட்டான்” என்று நினைத்து மனம் பூரித்தவாறு மெரினாவில் காற்று வாங்கப் போனான் தொண்டன்.

கலைஞர் பெரிய பக்தர்

கலைஞர்

டோலோ650யும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும்

ஃபேஸ்புக் உங்களிடம் பாரபட்சமாக நடக்கிறதா?

ஏ.ஆர்.ரஹ்மானை ஏன் கொண்டாட வேண்டும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here