’மக்கள் குடியரசுத்தலைவர்’ என அனைவராலும் புகழப்பட்ட அப்துல்கலாமின் பிறந்தநாள் அக்டோபர் 15 எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. “என் கண்டுபிடிப்பிலேயே மாற்றுத்திறனாளிகளுக்காக நான் கண்டுபிடித்த குறைவான எடை உடைய காலிபர்தான் சிறந்த கண்டுபிடிப்பு. அதைப்போட்டு நடக்கும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோஷம், பெற்றோர்களின் ஆனந்தக் கண்ணீர் இதுதான் எனக்கும் சந்தோஷம்” என்று தன் அக்னிச்சிறகுகள் புத்தகத்திலும் பல நிகழ்ச்சிகளிலும் கூறியுள்ளார். ஆனால், அந்தக் கண்டுபிடிப்பில் யாரும் சொல்லாத ஒரு கருப்பு பக்கம் இருக்கிறது. அது என்னவென்று மாற்றுத்திறனாளிகளே சொல்கிறார்கள், கேளுங்கள்.

“கலாம் காலிபர நான் இதுவரை பார்த்ததில்லை. அப்துல் கலாம் 1995-ல் டி.ஆர்.டி.ஓ தலைவரா இருந்தப்ப இந்த எடை குறைவான காலிபர கண்டுபிடிக்கப்போறதா பேப்பர்ல படிச்சன். அப்ப அவர் குடியரசுத் தலைவர் இல்ல. நிசாம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியோட சேர்ந்து இவர் கண்டுபிடிப்பதாக செய்திகள் வந்தது. நானும் அதத் தீவிரமா வருஷம் வருஷம் அந்த இன்ஸ்டிட்யூட் போய் கேப்பன். ஆனால், அதப் பத்தி யாருக்கும் எதுவும் தெரியாது.”, என்று ’இம்பாக்ட் சோன் இந்தியா’ (Impact Zone India) அமைப்பின் இயக்குனர், மருத்துவர் ஐஸ்வர்யா ராவ் தெரிவித்தார். இவரும் காலிபர் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளியே.

டாக்டர். ஐஸ்வர்யா ராவ்.
டாக்டர். ஐஸ்வர்யா ராவ்.

மாற்றுத்திறனாளிகள் பலரும் இதுபற்றி கூறும் போது, தாங்கள் பயன்படுத்தும் காலிபர் பிளாஸ்டிக் காலிபர், அது கலாம் காலிபர் கிடையாது என கூறினர். “இந்தியாவில் கிடைக்கிற எந்த காலிபரும் கலாம் கண்டுபிடிச்சதா சொல்ற ராக்கெட் தயாரிக்க பயன்படுத்தும் ‘காம்போஸைட்’ கொண்டு தயாரிக்கப்பட்டதல்ல. அவர் உயிருடன் இருக்கும்போதே அவருடைய கண்டுபிடிப்பு மக்களுக்கு சேந்துச்சா என்பதை கண்காணித்திருக்க வேண்டும். இப்ப அவர் இதக் கண்டுபிடிச்சாரா? என்கிற கேள்விதான் எங்களுக்குத் தோணுது.” என்றும் ஐஸ்வர்யா கூறினார்.

கலாம் காலிபர் இந்தியாவின் எந்த ஒரு மாற்றுத்திறனாளிக்கும் போய் சேரவில்லை என்பதற்கும் ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார். “இத நான் வெளியில் சொன்னாலும் யாரும் நம்பப்போவதில்லை. யார் இதுபற்றி ஊடகத்தின் வழியே சொல்வார்கள்?” எனவும் கேள்வி எழுப்புகிறார். தமிழ்நாட்டில் முக்தி எனும் இடத்தில் கலாம் காலிபர் எனக் கொடுப்பதும் பிளாஸ்டிக் காலிபரே. ’அலிம்கோ’ வணிக இணையதளத்தில் கிடைப்பதும் ’கலாம் காலிபர்’ அல்ல.

டி.ஆர்.டி.ஓ-வில் எந்த ஒரு கேள்வியையும் ஆர்.டி.ஐ.போட்டு கேள்வி கேட்க முடியாததால் இது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் இயக்கமான டிசம்பர்3 இயக்கத்தின் தலைவர் தீபக் கூறும்போது, “ஏன் இன்னும் ‘கலாம் காலிபர’ மத்திய, மாநில அரசுகள் வெளியில் கொண்டுவரவில்லை? அதை மக்களுக்கு ஏன் கொண்டுபோய் சேர்க்கவில்லை? தமிழ்நாட்டுல 1,00,000 பேர் காலிபர் பயன்படுத்துறாங்க. அவங்க யாருக்குமே இது போய் சேரல. இது அரசாங்கம் எங்க மேல எவ்ளோ கணிவோட இருக்குன்றத காட்டுது. ஒருவேளை இத செய்வதற்கான செலவுகள் நெறைய இருக்கலாம், அதனால கூட அரசாங்கம் இத செயல்படுத்தாம இருக்கோனு சந்தேகம் வருது. அவரோட அந்த ப்ராஜெக்ட் எங்க இருக்கு? அதோட அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் என்ன? ஏன் இத வெளிநாட்டு மக்களுக்குக் கூட கொடுக்கல? அவர் இந்தக் காலிபருக்கு பேட்டண்ட் வாங்கினாரா, இல்லையானு கூடத் தெரியல. இது வந்து முழுமையா அவர் சொல்ற பொருளால ஆனதா? இல்ல பாதிதான் அதால செஞ்சதா? ஏன் அவரே தன்னோட உயர்ந்த கண்டுபிடிப்பா சொல்ற காலிபர இன்னும் யார்கிட்டயும் போய் சேர்க்கல?” என தங்களுக்கு இதுபற்றி பல சந்தேகங்கள் இருப்பதாக கூறினார்.

தீபக், டிசம்பர்3 இயக்கம்.
தீபக், டிசம்பர்3 இயக்கம்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கத்தை நடத்தும் சங்கீதப்பிரியா எடை அதிகமான காலிபரை பயன்படுத்துவது மிகுந்த சிரமமாக இருப்பதாக கூறினார். ”இதுதான் கலாம் காலிபர்னு நாங்க ஏற்கனவே பயன்படுத்துறத கொடுக்குறாங்க. அதப்போட்டுட்டு நடக்க முடியாது, ஒண்ணும் பண்ண முடியாது. அரசாங்கம் இத கவனிச்சு எங்களுக்கெல்லாம் கொடுத்துச்சுன்னா ரொம்ப நல்லதா இருக்கும்” என்றும் தன் சிரமங்களைக் கூறினார், சங்கீதா.

“சில பேருக்கு ஒரு கால் சின்னதாகவும் ஒரு கால் பெரிதாகவும் இருக்கும். அத சமன்படுத்த இன்னும் கூடுதலா ஒரு ‘ஷூ’ போடுவாங்க, அது இன்னும் வெயிட்டா இருக்கும். அத ‘பேண்ட்’ போட்டுட்டுத்தான் போட முடியும். நடக்கும்போது கால், தோள்பட்டை எல்லாம் வலிக்கும். காலைல காலிபர் போட்டா தூங்கும் போது இரவுதான் கழற்றுவோம். அதனால, கலாம் காலிபர கொடுத்தா ஓரளவுக்காவது சுலபமா இருக்கும்.” என்று, ‘ஈக்வல்ஸ்’ என்னும் மாற்றுத்திறனாளி அமைப்பை சேர்ந்த மீனாட்சி என்பவர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளியாக இருப்பதே சிரமம், இப்படி அதிக எடையுள்ள காலிபரைப் பயன்படுத்துவது அதைவிட சிரமம். அப்துல்கலாம் எடைக்குறைவான காலிபரைக் கண்டறிந்துக் கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆன நிலையில் இதுபற்றி இப்படி பல கேள்விகள் எழுவது வேதனைக்குரியது. ஆகவே, அவருடைய அடுத்த பிறந்தநாளுக்குள்ளாவது இதுபற்றிய தெளிவு உண்டாக வேண்டும். அப்போதுதான் ‘மாற்றுத்திறனாளிகளுக்கான’ இந்தியாவாக நம் நாடு இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here