கலவரங்களையும், கொலைகளையும் முன்வைத்து நான் அரசியல் செய்ததில்லை; குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த 2002 கலவரத்தை மோடி மறந்து விட்டாரா ? – மம்தா பானர்ஜி

0
194

கலவரங்களையும், கொலைகளையும் முன்வைத்து நான் அரசியல் செய்ததில்லை. குஜராத் முதல்வராக இருந்தபோது 2002-ஆம் ஆண்டு நடந்தக்  கலவரத்தை மோடி மறந்து விட்டாரா என்று மம்தா பானர்ஜி கேட்டுள்ளார்.

மரியாதை நிமித்தமாக குர்தா, இனிப்புகள் அனுப்பியதை பிரதமர் நரேந்திர மோடி அரசியலாக்க முயற்சிக்கிறார் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்திருந்த பேட்டியில், எதிர்க்கட்சிகளில் தனக்கு பல நண்பர்கள் இருப்பதாகவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனக்கு ஆண்டுதோறும் பிறந்த நாளன்று குர்தாக்களை அனுப்பி வருகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த கருத்து குறித்து மேற்கு வங்க மாநிலம், சுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பதில் தெரிவித்தார். அவர் கூறியதாவது: குர்தாக்களை அனுப்புவதில் என்ன தவறு இருக்கிறது? துர்க்கை பூஜையின்போது முக்கியமானவர்களுக்கு நாங்கள் பரிசுகளை அனுப்புவோம். இந்தத் தகவலை வெளியிடுவதன் மூலம், இதை அரசியலாக்க மோடி முயற்சிக்கிறார்.


மோடி மீது நான் அதிக மரியாதை காட்டினேன். ஆனால் மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்த அவர், என்னை விமர்சித்துள்ளார். மோடிக்கு மட்டும் குர்தாக்கள், இனிப்புகளை அனுப்பவில்லை. பலருக்கு குர்தாக்களையும், இனிப்புகளையும் அவர்களது பிறந்தநாளன்று அனுப்பியுள்ளேன். இதை அவர்கள் யாரும் விவகாரமாக்கவில்லை. 

மோடிக்கு மேற்கு வங்கத்திலிருந்து ரசகுல்லாக்களை பரிசாக அனுப்புவோம் ஆனால் வாக்குகளைத் தரமாட்டோம். 

கலவரங்களையும், கொலைகளையும் முன்வைத்து நான் அரசியல் செய்ததில்லை. குஜராத் முதல்வராக இருந்தபோது 2002-ஆம் ஆண்டு நேரிட்ட கலவரத்தை மோடி மறந்து விட்டாரா என்றார் மம்தா.


இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடிக்கு குர்தாவையும், இனிப்புகளையும் மம்தா அனுப்பி வருவதற்கு மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், “மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் இதை செய்தார் எனில், அதில் தவறில்லை. இதே கொள்கையை மற்ற அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்’ என்றார்.