கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கலப்பட பாலுக்கு எதிரான பொதுநல வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கெனவே உத்தரவிட்டபடி, பொது சுகாதார துறை இயக்குனர் ஏன் ஆஜராகவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு உணவு பாதுகாப்பு துறை கூடுதல் இயக்குனர் ஆஜராகியுள்ளதாகத் தெரிவித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், கலப்பட பாலுக்கு எதிராக அரசுத்தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், பால் கலப்படம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 23 பேருக்கு 18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அறிக்கையை படித்த நீதிபதிகள், அரைகுறையாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அபராதம் மட்டுமே போதாது என தெரிவித்த நீதிபதிகள், தொடர்புடைய நபர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அப்போது தான் எதிர்காலத்தில் பாலில் கலப்படம் செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறைவார்கள் என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர். வெறும் 42 மாதிரிகள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளது குறித்தும் நீதிபதிகள் வினவினர்.

பால் விற்பனைக்கு இதுவரை எத்தனை பேர் உரிமை பெற்றுள்ளனர்? கலப்படம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? இதுவரை எத்தனை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? என்பது குறித்து ஜனவரி 21ஆம் தேதி நடக்கும் அடுத்த விசாரணையின் போது விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here