கறுப்பு பணத்தை ஒழிப்போம் என்று பாஜகவும் மோடியும் கொடுத்த வாக்குறுதி தற்போது அவர்களையே அச்சுறுத்துகிறது. சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி 2017இல் இந்தியர்கள் வைத்திருந்த பணம் 50 சதவீதம் உயர்ந்து ரூ. 7,000 கோடியை தொட்டுள்ளது.

இந்த கறுப்பு பணம் பற்றி ஏன் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார் என்றும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரும் நடவடிக்கையில் தனது அரசின் இயலாமையை பிரதமர் மோடி ஒப்புக் கொள்வாரா? என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது தொடர்பாக லக்னெளவில் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் –

ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து மோடி ஆட்சியைப் பிடித்தார்.

ஆனால், அவரது ஆட்சியில் ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்த பணம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அவர்கள் தவறான வழியில் பணம் சம்பாதித்து வெளிநாட்டு வங்கிகளில் டெபாஸிட் செய்கிறார்கள். கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீண்டும் திரும்பக் கொண்டு வரும் நடவடிக்கையில் தனது அரசின் இயலாமையை பிரதமர் மோடி ஒப்புக் கொள்வாரா? அதாவது தனது தோல்வியை மோடி ஒப்புக் கொள்வாரா ?

இந்தியாவில் இருக்கும் பெரும் தொழிலதிபர்கள் இங்கிருக்கும் வங்கிகளில் பணம் பெற்று தங்கள் தொழில்களை வளர்த்துக் கொண்டு வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை டெபாஸிட் செய்துக் கொண்டு நாட்டை விட்டு ஓடி விடுகிறார்கள் . அப்படி ஓடுபவர்களை மோடி அரசு தடுக்காதது ஏன் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

வெளிநாட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் பாஜகவுக்கு நெருக்கமானவர்கள், அதனால்தான் குறுகிய காலத்தில் இந்தியாவின் பணக்கார கட்சியாக பாஜக இருக்கிறது.

தேர்தலுக்கு முன் மோடி கொடுத்த, கறுப்புப் பணத்தை மீட்டு வருவது முதலான வாக்குறுதிகளை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். வளர்ச்சித் திட்டங்களை புறந்தள்ளிவிட்டு பாஜக வெறுப்பு, வகுப்புவாதம், மக்களை பிளவு படுத்தும் அரசியல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறார்கள் .

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் அதிகம் டெபாஸிட் செய்ய என்ன காரணம் ? இது தேசத்தின் பொருளாதார நலன் சார்ந்த பிரச்னையாகும். இந்தியாவின் பொருளாதாரத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்குவதுதான் மோடியின் தேசப் பற்றா?

பாஜக அரசு பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாகவும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட மக்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது. இதுதான் மோடி அரசின் பொருளாதாரச் சாதனையா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
 
வறுமை ஒழிப்பு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்பை உருவாக்குவது என அனைத்திலும் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது.
மத்திய அரசுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது என்பது மக்கள் நலன் சார்ந்த விஷயம். ஜிஎஸ்டியின் மோசமான விளைவுகளை ஆய்வு செய்து, அவற்றை சரி செய்ய வேண்டும் மத்திய அரசு அதைவிட்டுவிட்டு ஜிஎஸ்டி முழு வெற்றி என்று கூறுவதை ஏற்க முடியாது என்று மாயாவதி கூறியுள்ளார்.

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்