கர்நாடக விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

0
152

கர்நாடகாவில் 15 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடித விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமி முதல்- மந்திரியாக உள்ளார்.

இந்த நிலையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றனர். இதனால் கர்நாடக அரசுக்கு கடும் ஆபத்து ஏற்பட்டது.

16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த அவர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை, டெல்லியில் உள்ள ஓட்டல்களில் தங்கி உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் சமாதானத்தை அவர்கள் ஏற்கவில்லை. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையே ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட கோரி 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பிறகு மேலும் 5 எம்.எல்.ஏ.க்களும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, “இது அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும், கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து எந்த முடிவும் எடுக்க கூடாது” என்றும் உத்தரவிட்டு வழக்கை 16-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

இதையடுத்து இன்று எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகார வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கூறியதாவது:-

“ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் துப்பாக்கி முனையில் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? அவர்கள் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க விரும்பாத போது அவர்களை எப்படி கூட்டத்தில் பங்கேற்க வற்புறுத்த முடியும்.

சிலருடன் அமர்ந்து பேச நாங்கள் விரும்பாதபோது சபாநாயகர் தொடர்ந்து எங்களை நிர்பந்திக்கிறார். இந்த அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து அரசை காப்பாற்ற முயற்சி நடக்கிறது. ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனே முடிவு எடுக்க வேண்டும்.

ஒரு கட்சியில் இருக்க பிடிக்காமல் அங்கு தொடர்ந்து எப்படி இருக்க முடியும். தகுதி நீக்கம் செய்தால் வேறு கட்சிக்கு தாவ முடியாது. ராஜினாமாவை ஏற்றால் வேறு கட்சியில் சேர்ந்து அமைச்சர் ஆக முடியும்.

தகுதி நீக்கம் செய்வதற்காகவே ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் நிலுவையில் வைத்திருக்கிறார். ராஜினாமா முடிவு தன்னிச்சையானதா? இல்லையா? என்பதைதான் சபாநாயகர் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியதாவது:-

“எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடித விவகாரத்தில் சபாநாயகர் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட முடியாது. ஒருவரை சபாநாயகர் ராஜினாமா அல்லது தகுதி நீக்கம் செய்யும்போது அதில் அரசியலமைப்பு கடமை உள்ளதா என்பதை மட்டுமே நாங்கள் பார்க்க முடியும்.

ராஜினாமா கடிதங்கள் சரியாக உள்ளதே? எம்.எல். ஏ.க்கள் சுப்ரீம்கோர்ட்டை நாடும்வரை சபாநாயகர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்?

இவ்வாறு அவர் கூறினார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் முடிவு எடுப்பதில் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறி இருப்பதால் சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வழி ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதனால் 18-ந்தேதி நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 15 எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here