கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என இந்திய டுடே நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் சித்தராமையாவின் ஆட்சி முடிவடைகிறது. இந்நிலையில் வரும் மே மாதம் 12ஆம் தேதி அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வந்தாலும், கர்நாடக மாநிலத் தேர்தலில் பாஜக வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அந்தக் கட்சி உள்ளது.

காரணம், இத்தேர்தல் முடிவுகள் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பாஜக இத்தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதே போன்று காங்கிரஸ் கட்சியும், இருக்கும் இடத்தை இழந்துவிடக் கூடாது என்பதில் கவனமுடன் செயல்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சி ஃபோர் அமைப்பு நடத்தி கருத்துக்கணிப்பில், கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஒன்பது சதவிகிதம் கூடுதல் வாக்குகளை பெற்று மொத்தம் 46% வாக்குகளை பெறும் எனக் கூறப்பட்டிருந்தது. அதேபோன்று பாரதிய ஜனதா கட்சி 31 சதவிகித வாக்குகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 16 சதவிகிதம் வாக்குகளையும் கவரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 126 இடங்களும், பாஜகவுக்கு 70 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 27 இடங்களும் கிடைக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரியவந்துள்ளது. மொத்தம் 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு, ஆட்சியமைக்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தற்போது இந்தியா டுடே நடத்தியிருக்கும் கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சிக்கு 90 முதல் 101 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், பாஜகவுக்கு 78 முதல் 86 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 34 முதல் 43 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அதேபோன்று, காங்கிரஸ் கட்சி 37 சதவிகித வாக்குகளையும், பாரதிய ஜனதா கட்சி 35 சதவிகித வாக்குகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 சதவிகித வாக்குகளையும் கவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here