கர்நாடக சட்டப்பேரவையில் உறங்கிய எடியூரப்பா

0
602

கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சரின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாஜக எம்.எல்.ஏக்கள் இரவு முழுவதும் பேரவையிலேயே தங்கி தர்ணாவில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? கவிழுமா என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று காலை 11 மணியளவில் சட்டப்பேரவை கூடியது. அப்போது தன் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் குமாரசாமி பேசினார். தமது ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தீவிரமாக இருப்பதாக அப்போது அவர் குற்றஞ்சாட்டினார். 

அதே சமயம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் ஆளும் கட்சி தாமதம் செய்வதாக குற்றஞ்சாட்டிய பாஜகவினர், வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவரான ஸ்ரீமந்த் பாட்டீலை பாஜக கடத்தி விட்டதாக அமைச்சர் சிவக்குமார் அதிரடியாக குற்றஞ்சாட்டியதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக ஜனநாயகப் படுகொலையை செய்து வருவதாக கூச்சலிட்டனர். எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் மும்பையில் சிகிச்சை பெறும் படத்தையும் அவரது மருத்துவ ஆவணங்களையும் காட்டி காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். 

இதையடுத்து சபாநாயகர் அவையை அரை மணி நேரம் ஒத்திவைத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என பாஜகவினர் ஆளுநரை சந்தித்து முறையிட்ட நிலையில், நேற்று மாலைக்குள் நடத்துமாறு சபாநாயகரை ஆளுநர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் ஆளுநரின் வேண்டுகோளுக்கு எதிராக பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவை இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

முதலமைச்சரின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாஜக எம்.எல்.ஏக்கள் இரவு முழுவதும் பேரவையிலேயே தங்கி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் பேரவையிலேயே உறங்கினர். இதற்காக சிலர் தலையணை, படுக்கை விரிப்புடன் பேரவைக்கு வந்திருந்தனர். பெரும்பாலான பாஜக உறுப்பினர்கள் இந்தத் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here