கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி – பாரதிராஜா அறிக்கை

0
277
Rajinikanth & Bharathi Raja

ரஜினிகாந்த் கர்நாடக காவியின் தூதுவர், எதை பேசுகிறோம் என்பதை ரஜினி தெரிந்து பேச வேண்டும் என்று பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த போராட்டத்தின் போது சிலர் போலீஸ்காரர்களை தாக்கினர். இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட ரஜினி, ‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்’ என்று கூறி இருந்தார். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

அரசின் ஏவலாளாக காவல்துறை சமீபமாக புரிந்துவரும் வன்முறை அளப்பரியது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்க குரூரமாக தடியடி நடத்தியதுடன் குடிசைகளையும், ஆட்டோக்களையும் சீருடை அணிந்த காவலர்களே தீயிட்டு கொளுத்தினர். டூ வீலரில் சென்ற தம்பதியை உதைத்து அதில் பயணத்த கர்ப்பிணி இறந்து போகக் காரணமாக இருந்ததும் சீருடை அணிந்த காவலரே. காவல்துறையின் இதுபோன்ற அடாவடிகளை கண்டிக்காத ரஜினி, இரண்டு பேர் காவல்துறையை தாக்கியதற்கு சினந்து எழுந்தது அனைவரையும் ஆத்திரப்படுத்தியது நியாயமே. இயக்குனர் பாரதிராஜா ரஜினியை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம்மீது கத்தி வைத்துப் பதம் பார்க்க நினைக்கும், ரஜினி அவர்களின் சமீபத்திய ட்விட்டர் பேச்சு. நான் அவரை கேட்கிறேன், எது வன்முறையின் உச்சக்கட்டம் ரஜினி அவர்களே? அறவழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும் பேச்சு இது.

தங்களுடைய திரைப்படம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும் உங்களைப் போன்ற ஒரு நடிகனைத் தமிழ்த் திரை உலகம் இதுவரை சந்தித்ததே இல்லை. தமிழ்நாட்டிலும் சரி.. உலக அளவிலும் சரி.. தமிழன் கொட்டிக் கொடுத்த பணத்தில், சேர்த்துவைத்த செல்வத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த போது குரல் கொடுத்தீர்களா?

நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடினீர்களா? இல்லை, ஒரு அறிக்கையாவது விட்டீர்களாடூ

மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா?

எதற்கும் வாய்த் திறக்காத நீங்கள், இன்று காவிரிக்காக ஒன்று கூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை, வன்முறைக் கலாச்சாரம் இதை ஆரம்பத்திலே கிள்ளியெறிய வேண்டும் என்கிறீர்களா!

காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம். நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழன் உறிஞ்சிய ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள்.

பேசும் போது எதை பேசுகிறோம் என்பதை உணர்ந்து பார்த்து பேசுங்கள். ரஜினி வீட்டு சாப்பாடு, குடிநீருக்கு சேர்த்துதான் வீரத்தமிழ் இளைஞர்கள் தடியடியில் ரத்தம் சிந்தினர். கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும், தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டபோதும் குரல் கொடுக்காமல் தற்போது மட்டும் குரல் கொடுப்பது ஏன்.

ஓ! இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது. நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடகக்காவியின் தூதுவர் என்று!

உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது. நீங்கள் எங்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்.”

– இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: “அசிஃபாவை கொன்றது சரியே” – சமூக ஊடகத்தில் பதிவிட்டவரை பணி நீக்கம்…

இதையும் படியுங்கள்: மனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படி?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்