“கர்நாடக ஆளுநரின் முடிவு முட்டாள்தனமானது” – ராம்ஜெத்மலானி

0
220

கர்நாடக மாநிலத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கர்நாடக ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சியும், 38 இடங்களில் வென்ற மதசார்பற்ற ஜனதா தளமும் தேர்தலுக்குப்
பின் கூட்டணி அமைத்தன. காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.104 இடங்களைப் பெற்ற பாஜகவும் ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியது.

இந்தச் சூழலில் ஆளுநர் வாஜுபாய் முதல்வராக பதவி ஏற்க எடியூரப்பாவுக்கு நேற்று (புதன்கிழமை) அழைப்பு விடுத்தார். இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து இன்று(வியாழகிழமை) 9 மணிக்கு எடியூரப்பா மாநிலத்தின் 23-வது முதல்வராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், ஆளுநர் வாஜுபாய் வாலாவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வழக்குத் தொடர்ந்துள்ளார். அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய ஒட்டுமொத்த அதிகாரத்தையும், தான் வகிக்கும் பதவியையும் வாஜுபாய் வாலா தவறாக பயன்படுத்திவிட்டார் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார் . இந்த மனு வரும் 18-ம் தேதி காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் தாக்கல் செய்தமனுக்களோடு சேர்த்து விசாரிக்கப்படுகிறது.

’’கர்நாடக ஆளுநரிடம் பாஜக கூறியிருப்பதை வைத்து , ஆளுநர் வாஜுபாய் வாலா முட்டாள்தனமான முடிவு எடுத்துள்ளார்.
ஆளுநரின் முடிவு என்பது, ஊழலையும், குதிரைபேரத்தையும், வெளிப்படையாக அழைப்பிதழ் வைத்து அழைப்பதுபோல் இருக்கிறது. இது குதிரை பேரம் அல்ல, கழுதை பேரம் ”

ஆளுநர் தனக்கு அரசியலமைப்புச்சட்டம் கொடுத்த பதவியையும், தகுதியையும் சட்டத்துக்கு விரோதமாகப் பயன்படுத்திவிட்டார். நான் எந்தக் கட்சிக்கும் விரோதமாகவோ, ஆதரவாகவோ பேசவில்லை ” என்று செய்தியாளர்களிடம்
பேசிய ராம்ஜெத் மலானி தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்