கர்நாடக அரசியல் குழப்பம்: ஆளுநர் உத்தரவு புறக்கணிப்பு

0
325

கர்நாடக சட்டப்பேரவையில் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கான தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம் வெள்ளிக்கிழமை இரவு  வரை நீடித்தது. அவையை ஒத்திவைக்கக் கோரி மஜத-காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், வரும் 22-ம் தேதிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமையே நடத்த வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலா இரு முறை பிறப்பித்த உத்தரவை அவை புறக்கணித்து விட்டது. 

காங்கிரஸ்,  மஜத கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மும்பையில் தஞ்சம் அடைந்ததைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. 14 மாதங்களாகியுள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தனது பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியது.

இதனிடையே, ஜூலை 12-ஆம் தேதி பேரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி,  கர்நாடக அரசியலில் நிகழ்ந்துவரும் திருப்பங்களைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர முடிவு செய்துள்ளேன். அதற்கு பேரவைத் தலைவர் நேரம் ஒதுக்கித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து கூடிய சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுவில் ஜூலை 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதென்று முடிவானது. அதன்படி, கர்நாடக சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஜூலை 18) கூடியதும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்து பேசினார்.

திசை மாறிய விவாதம்: கட்சித் தாவல் தடைச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, முதல்வர் குமாரசாமி பேசிக் கொண்டிருக்கும் போது,   உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 15 எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்கு வரவழைக்கக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா ஒழுங்குப் பிரச்னையைக் கொண்டுவந்தார். இதனால் விவாதம் திசை மாறியது. பாஜக எம்எல்ஏக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆளுநர் வஜுபாய் வாலா,  நம்பிக்கை வாக்கெடுப்பை வியாழக்கிழமையே நடத்தி முடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைக்கு அனுப்பிய தகவல் ஏற்புடையதா? என்பது பற்றி விவாதம் நடக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இதனிடையே, முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா எழுதியிருந்த கடிதத்தில் நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமை(ஜூலை 19) நண்பகல் 1.30 மணிக்குள் நடத்தவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநர் கெடு: கர்நாடக சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை கூடியதும் முதல்வர் குமாரசாமி தான் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.  இதனிடையே, ஆளுநரின் கெடு குறித்து முதல்வர் குமாரசாமி குறிப்பிட்டதும் அது தொடர்பாக காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் பேசத் தொடங்கினர். ஆளுநர் விதித்த நண்பகல் 1.30 மணியைக் கடந்தும் விவாதம் நீண்டது.  இதைத் தொடர்ந்து,  நண்பகல் 1.45 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டு,  மீண்டும் மாலை 3 மணிக்கு கூடியது.

 அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமைக்குள் நடத்துமாறு ஆளுநர் இரண்டாவது முறை கடிதம் எழுதி கெடு விதித்திருப்பதை முதல்வர் குமாரசாமி அவைக்குத் தெரிவித்தார்.  ஆளுநரின் தலையீடு சரியா? என்று காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் விவாதிக்கத் தொடங்கினர்.  பின்னர் முதல்வர் குமாரசாமி தனது உரையை நிறைவு செய்தார்.

அவை ஒத்திவைப்பு: இதைத் தொடர்ந்து, மஜத உறுப்பினர் சிவலிங்கே கெüடா, காங்கிரஸ் உறுப்பினரும் அமைச்சருமான பிரியங்க் கார்கே, நாராயண்ராவ் உள்ளிட்டோர் பேசினர்.  இதனிடையே, அவையை ஜூலை 22-ஆம் தேதிக்கு(திங்கள்கிழமை) ஒத்திவைக்குமாறு காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் வலியுறுத்தினர். எவ்வளவு நேரம் ஆனாலும் வெள்ளிக்கிழமையே வாக்கெடுப்பு நடத்துமாறு பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.  

இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவையில் தொடர்ந்து கூச்சல்,  குழப்பம் நிலவியது.  அவையை ஜூலை 22-க்கு ஒத்திவைக்குமாறு முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.  இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, வெள்ளிக்கிழமையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு வலியுறுத்தினார். ஆனாலும் அமளி தொடர்ந்ததால், அவையை திங்கள்கிழமை(ஜூலை 22) காலை 11 மணிக்கு ஒத்திவைத்து பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.

காலம் கடத்தவில்லை-பேரவைத் தலைவர்:  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காலம் கடத்தவில்லை என்று பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

பேரவைக் கூட்டம் தொடங்கியதும், இது தொடர்பாக அவர் கூறியதாவது:

முதல்வர் குமாரசாமி கொண்டு வந்துள்ள நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு  நான் காலம் தாழ்த்துவதாக சுமத்தும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. நான் ஒருசார்பாக நடந்து கொள்ள விரும்பவில்லை. காலம் தாழ்த்துவதாகக் கூறுவது எனக்கு வருத்தமளிக்கிறது. 

ஒருநாள் கடத்தினால் ரூ.12 கோடி பணம் கிடைப்பதாக என்மீது குற்றம்சாட்டியுள்ளனர்.  இதுபோன்ற குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தினால், அதற்கு தகுந்த பதிலடி தர வேண்டியிருக்கும்.  இங்கு அமர்ந்து வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளை வழங்குவதற்காக வந்திருக்கிறேன்.  நம்பிக்கை வாக்கெடுப்பை காலம் தாழ்த்துவதாக ஒருசிலருக்கு சந்தேகம் இருக்கலாம். ஆனால், பொது வாழ்க்கையை நேர்மையுடன் நடத்தி வந்திருக்கிறேன். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது எளிது.  என்னை விமர்சிப்பதற்கு முன்னால் யோசித்துப் பேசுங்கள் என்றார்.

ஆளுநர் கெடு விதிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி மனு   

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கெடு விதிக்க முடியாது எனக் கூறி, உச்சநீதிமன்றத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

பேரவையில் விவாதம் தொடங்கி நடந்து கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், அவை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஆளுநரால் உத்தரவிட முடியாது.

ஆளுருக்கு உரிய அதிகாரங்களை இந்த நீதிமன்றம் ஏற்கெனவே வரையறுத்துவிட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேச மாநில விவகாரத்தை விசாரித்த இந்த நீதிமன்றம், பேரவைத் தலைவரின் செயல்பாடுகளில் தலையிடுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்து விட்டது. எனவே, ஆளுநர் வஜுபாய் வாலா பிறப்பிக்கும் உத்தரவுகள், ஆளுநருக்குரிய அதிகாரங்களுக்கு முற்றிலும் முரணாக உள்ளன.

அதுமட்டுமன்றி, அரசமைப்புச் சட்டப்படி, ஒரு அரசியல் கட்சி தனது எம்எல்ஏகளுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது. ஆனால், பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது என்று இந்த நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை, நீதிமன்றம் மேலும் தெளிவுபடுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Courtesy: DN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here