கர்நாடகா ஆட்சி கவிழ்ப்பு ; பாஜகவின் அனைத்து பொய்களும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும்; விளாசும் பிரியங்கா காந்தி

0
258

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் அமைந்திருந்த ஆட்சி கவிழ்ந்துள்ளது. அம்மாநிலத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள், பாஜக முகாம் நோக்கி சென்றதால்,  சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிவிட்டது. பாஜக, தனது மெஜாரிட்டியை நிரூபித்துள்ளது. இதனால், அக்கட்சியின் எடியூரப்பா, மீண்டும் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த பரபரப்பான அரசியல் சூழல் குறித்து காங்கிரஸின் பிரியங்கா காந்தி வத்ரா, “எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்க முடியாது என்கிற உண்மையை பாஜக ஒருநாள் உணரும். அவர்களின் அனைத்து பொய்களும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும். அதுவரை பல நாட்களாக பல தியாகங்களுக்கு மத்தியில் போராடி ஏற்படுத்தப்பட்ட நாட்டின் ஜனநாயகம், அமைப்பு ஆகியவை அழிவதையும், ஊழல் தலைவிரித்தாடுவதையும் மக்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்   என்று பதிவிட்டுள்ளார்.

கர்நாடக சட்டசபையின் மொத்த பலம் 225. நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 20 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்கவில்லை. இதில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்- மஜத கூட்டணிக்கு 99 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், பாஜக-வுக்கு 105 வாக்குகள் கிடைத்தன. இதனால், அந்தக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. 

கர்நாடகத்தில் இப்படி ஆட்சி கவிழ்ப்பு நடந்ததற்கு, பாஜக-வின் குதிரை பேர அரசியல்தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. 

இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்ற முதல் நாளில் இருந்தே உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஏனென்றால் தங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பதால் சிலர் இதுபோன்ற அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்தனர். அவர்களின் பேராசை இன்று வெற்றிபெற்றுவிட்டது. இதனால் நேர்மை, ஜனநாயகம் மற்றும் கர்நாடக மக்கள் தோல்வியடைந்துவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here