கர்நாடகா அரசியல் குழப்பம் ; ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம் அதிரடி

0
291

ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர், தங்களுடைய ராஜினாமா கடிதங்களை சட்டப் பேரவைத் தலைவர் ஏற்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அந்த தீர்ப்பில், எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரத்தில் முடிவெடுக்க அவைத் தலைவருக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு அவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது. அதேப்போல ராஜினாமா கடிதத்தை ஏற்க அவைத் தலைவருக்கு கால அவகாசம் எதையும் வழங்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

வியாழக்கிழமை  கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது எம்எல்ஏக்களின் விருப்பம். வாக்கெடுப்பில் பங்கேற்க அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

அவைத் தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் கர்நாடக அரசியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்பு எந்த விதமான சூழ்நிலை இருந்ததோ, அதே இடத்துக்குத்தான் மீண்டும் வந்து நிற்கிறது.

கர்நாடக சட்டப் பேரவையில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசு வியாழக்கிழமை (ஜூலை 18) நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சிங், ரமேஷ் ஜார்கிஹோளி, ராமலிங்க ரெட்டி, எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், பி.சி.பாட்டீல், சிவராம் ஹெப்பார், பிரதாப் கெளடா பாட்டீல்,  மகேஷ் குமட்டஹள்ளி, முனிரத்னா, ரோஷன் பெய்க், எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர், மஜதவைச் சேர்ந்த எம் எச்.விஸ்வநாத், கே.சி.நாராயணகெளடா, கோபாலையா ஆகிய 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

தங்களது ராஜினாமா கடிதங்களை ஏற்காமல், பேரவைத் தலைவர் கால தாமதம் செய்வதாகவும், அவற்றின் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க அவருக்கு உத்தரவிடக் கோரியும் காங்கிரஸ் – மஜதவைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனுவை கடந்த வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், அன்று மாலை 6 மணிக்கு பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து ராஜிநாமா கடிதங்களை அளிக்குமாறு எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தியது. மேலும், அந்த கடிதங்கள் மீது பேரவைத் தலைவர் எடுத்த நடவடிக்கையை மறுநாள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதன்படி, பேரவைத் தலைவர் ரமேஷ் குமாரிடம் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் ராஜிநாமா கடிதங்களை அளித்தனர். ஆனால், அவற்றை உடனடியாக ஏற்க பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜிநாமா கடிதங்கள் மீதும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாகவும் பேரவைத் தலைவர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது; ஜூலை 16-ஆம் தேதி வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள், தங்களுடைய ராஜிநாமா கடிதங்களை ஏற்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, கர்நாடக முதல்வர், பேரவைத் தலைவர், அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆகியோரின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது: முதல்வர் குமாரசாமி சார்பில் மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவண் வாதிட்டதாவது:

எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றோ, தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்றோ சட்டப் பேரவைத் தலைவருக்கு இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. இந்த விவகாரத்தில், சட்டப் பேரவைத் தலைவரின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது. கர்நாடக அரசை கவிழ்க்கும் முயற்சியில் அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவாக ஈடுபட்டுள்ளனர். அவர்களது மனுக்கள் விசாரணைக்கு உகந்தவையே அல்ல என்றார்.

முடிவெடுக்கத் தயார்: அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்கள், தகுதிநீக்கம் ஆகிய இரு விவகாரங்களிலும் புதன்கிழமையே முடிவெடுக்க, பேரவைத் தலைவர் தயாராக உள்ளார்; எனவே, நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்று அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஏ.எம்.சிங்வி கோரினார்.

அவர் மேலும் வாதிடுகையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 11 பேர், பேரவைத் தலைவரிடம் கடந்த 11-ஆம் தேதிதான் நேரில் ராஜிநாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். ஆனால், அதற்கு முன்பே அவர்களை தகுதிநீக்கக் கோரும் மனுக்கள் பேரவைத் தலைவரிடம் அளிக்கப்பட்டன. ராஜிநாமா கடிதங்களின் மீது முதலில் முடிவெடுக்குமாறு கூறி, பேரவைத் தலைவரின் அதிகாரத்துக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்றார்.

நீதிபதிகள் கேள்வி: இந்த வாதங்கள் முன்வைக்கப்பட்டபோது, நீதிபதிகள் இடையிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதிருப்தி எம்எல்ஏக்கள், கடந்த 11ஆம் தேதி பேரவைத் தலைவரிடம் நேரில் ராஜிநாமா கடிதங்களை அளித்தபிறகும், அவர் உடனடியாக முடிவெடுக்காதது ஏன்? எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதிநீக்க நடைமுறைகளையும் அவர் நிலுவையில் வைத்திருப்பது ஏன்? அதன் நோக்கம் என்ன?’ என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று காலை இந்த தீர்ப்பை வழங்கினர்.

விதிகளை மீறிவிட்டார் பேரவைத் தலைவர்
விசாரணையின்போது, அதிருப்தி எம்எல்ஏக்களின் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி முன்வைத்த வாதங்கள் வருமாறு:
அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை நிலுவையில் வைத்திருப்பதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க அந்த எம்எல்ஏக்களை சட்டப் பேரவைத் தலைவர் நிர்ப்பந்திக்கிறார்.

தகுதிநீக்க நடைமுறையில், அரசமைப்புச் சட்டத்தின் 10-ஆவது பிரிவின்படி பேரவைத் தலைவர் விசாரணை நடத்த வேண்டும். ஆனால், ராஜிநாமா கடிதங்கள் மீது முடிவெடுப்பது அப்படியல்ல. எம்எல்ஏக்கள் தாமாக முன்வந்து பதவி விலகுகிறார்களா அல்லது கட்டாயத்தின் பேரில் பதவி விலகுகிறார்களா என்பதை மட்டும் பேரவைத் தலைவர் கருத்தில் கொண்டால் போதுமானது. எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவர் தொடர்ந்து நிலுவையில் வைத்திருப்பதன் மூலம் அரசமைப்புச் சட்ட விதிகளை அவர் மீறிவிட்டார்.

அதிருப்தி எம்எல்ஏக்கள், பாஜகவுடன் இணைந்து சதி செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த விவகாரத்தில், எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதத்தை ஏற்பதை தவிர வேறெந்த வாய்ப்பும் பேரவைத் தலைவருக்கு கிடையாது என்றார் முகுல் ரோத்தகி.

dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here