கர்நாடகாவில் 14 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம்; நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு சிக்கல் இல்லை

0
352


கர்நாடகாவில் மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) எம்எல்ஏ-க்கள் 16 பேர் ராஜினாமா செய்ததையடுத்து, அங்கு மிகப் பெரிய அரசியல் குழப்பங்கள் எழத் தொடங்கியது. இதன் விளைவாக குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. 

இதையடுத்து, கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி எம்எல்ஏ ஆர்.சங்கர், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ரமேஷ்ஜார்கி ஹோளி,  மகேஷ் குமட்டஹள்ளி ஆகிய 3 பேரையும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து கர்நாடக பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் கடந்த வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து, ஆட்சி அமைக்க உரிமை கோரிய பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ். எடியூரப்பா கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல்வராக பொறுப்பேற்றார். அவர் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நாளை நடைபெறுகிறது. 

இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு சபாநாயகர் தாமாக ராஜினாமா  செய்கிறாரா என்று பார்ப்போம், இல்லையெனில் அவர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவருவோம் என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் தெரிவித்திருந்தார். இதனால், கர்நாடக அரசியலில் நாளுக்கு நாள் குழப்பங்கள் இருந்து வந்தன. 

இந்த நிலையில், சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ்குமார் மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏ-க்களை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக அவர் உத்தரவிட்டார். அவர் பேசுகையில், 

“நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு பி.எஸ். எடியூரப்பா கேட்டுக்கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து எம்எல்ஏ-க்களும் பங்கேற்க வேண்டும். சபாநாயகராக கர்நாடகாவில் நிகழும் அரசியல் சூழ்நிலைகளால் நான் மிகப் பெரிய அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளேன். இந்த விஷயங்கள் அனைத்தும் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. 

ரோஷன் பைக், ஆனந்த் சிங், ஹெச். விஷ்வநாத் மற்றும் எஸ்டி சோமசேகர் ஆகியோர் உட்பட அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் காங்கிரஸ் உறுப்பினர்கள், 3 பேர் மஜத உறுப்பினர்கள்” என்றார். 

இதன்மூலம், கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 

17 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, சட்டப்பேரவையின் பலம் 207 ஆக குறைந்துள்ளது. எனவே, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான எண்ணிக்கை 104 ஆகும். ஆனால், பாஜக வசம் 105 உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதால் எடியூரப்பா தலைமையிலான அரசின் மீதான நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here