கர்நாடகாவில் பிறமொழிப் படங்கள் கன்னடத்தில் டப் செய்து வெளியிட தடை உள்ளது. அங்குள்ள திரையுலகினர், கன்னட அமைப்புகள் இந்த தடையை விதித்துள்ளன. தமிழ் உள்ளிட்ட பிற மொழிப்படங்கள் கன்னடத்தில் டப் செய்து வெளியிட்டால் நேரடி கன்னடப் படங்கள் பாதிக்கப்படும் என இதற்கு காரணம் கூறுகிறார்கள்.

ஒரு படம் வெளியாகி சில வாரங்கள் கடந்த பிறகும் கன்னடத்தில் டப் செய்து வெளியிட முடியாது. கன்னட அமைப்புகள் அதனையும் தடுத்தன. இந்நிலையில் அஜித்தின் விவேகம் படம் தமிழில் வெளியாகி பல மாதங்கள் கடந்த பிறகு கன்னடத்தில் டப் செய்து வெளியிடப்பட்டது. அப்போதும் கன்னட திரையுலகிலும், அதற்கு வெளியேயும் எதிர்ப்புகள் கிளம்பின. படத்தை வெளியிட மறுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய போட்டிகள் ஆணையம் எச்சரித்த பிறகே படம் வெளியானது.

அதேநேரம் கன்னடத்தில் தயாரான கேஜிஎஃப் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி நான்கு மொழிகளில் டப் செய்து, கன்னடத்தில் படம் வெளியான அதே டிசம்பர் 21 வெளியிட்டனர். கேஜிஎஃப்பின் தமிழ் பதிப்பை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வெளியிட்டுள்ளது. ஒரு கன்னடப் படத்தை அது வெளியாகும் அதே தினத்தில் பிற மொழிகளில் வெளியிடும் போது, ஏன் பிறமொழிப் படங்களை கன்னடத்தில் வெளியிடக் கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது. உண்மையில் கேள்வி அல்ல கோபம்.

பொங்கலுக்கு வெளிவரும் பேட்ட, விஸ்வாசம் படங்கனைள கன்னடத்தில் டப் செய்து வெளியிட வேண்டும், அதற்கு மறுப்பு தெரிவித்தால் இனிவரும் காலங்களில் எந்த கன்னடப் படத்தையும் அனுமதிக்கக்கூடாது என தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. இந்த குரல்கள் வலுப்பட வேண்டும், நினைத்ததை சாதிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here