கர்நாடக மாநில விவசாயிகள் மகதாயி பிரச்சினையைத் தீர்க்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில், வியாழக்கிழமை (இன்று) அம்மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

1. கர்நாடகாவில் மகதாயி என அழைக்கப்படும் ஆறு, கோவாவில் மந்தோவி என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் சிறிய நதிகளில் இதுவும் ஒன்றாகும். கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் பீம்காத் பகுதியிலிருந்து உருவாகும் இந்த நதி, 35 கிலோ மீட்டர் கர்நாடகா வழியாகவும், 52 கிலோமீட்டர் கோவா வழியாகவும் கடந்து அரபிக் கடலில் கலக்கிறது.

2. கோவா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லைப் பகுதி மக்கள் மகதாயி நதிநீரை நம்பியுள்ளனர். மகதாயி ஆற்றிலிருந்து 7.6 டிஎம்சி தண்ணீர் தருமாறு கோவா அரசிடம் கர்நாடக அரசு கோரிக்கை வைத்தது. இதனை கோவா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

3. இதனையடுத்து, கடந்த 2002ஆம் ஆண்டு, மகதாயி ஆற்றின் சிற்றாறுகளான கலசா மற்றும் பண்டூரிலிருந்து மலபிரபா ஆற்றுக்கு கால்வாய் கட்டுவதற்காக மத்திய அரசிடம் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசு அனுமதி பெற்றது. இதற்கு கோவா மாநில ஆளும் கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

4. கால்வாய் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவா மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இதனிடையே, கடந்த 2010ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசானது மகதாயி நதிநீர் தீர்ப்பாயத்தை அமைத்தது. கடந்த 2016ஆம் ஆண்டு இந்தத் தீர்ப்பாயம், கர்நாடக அரசின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்தது.

5. இந்நிலையில் சமீபத்தில் கோவா நீர்பாசனத்துறை அமைச்சர், மகதாயி நீரை கர்நாடகத்துக்கு வழங்க முடியாது என்று சொன்னதால், இந்தப்பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கோவாவில் பாஜக ஆட்சி நடைபெறுவதால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தீர்வு காண வலியுறுத்தி, கன்னட அமைப்புகள், விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மைசூருவில் வியாழக்கிழமை (இன்று) பாஜக சார்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவிருக்கிறார். இதனையொட்டியே இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

விரைவில் தேர்தல் வரவுள்ளநிலையில், காங்கிரஸ் கட்சி இதனை அரசியலாக்கி வருவதாக கர்நாடக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்