தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டம் அட்சய பாத்திரம் குழுமத்துக்கு கைமாறியுள்ளது.

தமிழக அரசின் மேற்பார்வையின் கீழ் நடந்து வரும் காலை உணவுத்திட்டம் இனி அட்சய பாத்திரம் என்ற தனியார் குழுமத்தின் கைக்கு மாறுகிறது. காலை உணவுத் திட்டம் கடந்தாண்டுதான் கொண்டு வரப்பட்டது.

இதற்கு பல தரப்புகளிலும் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. சமீபத்திய தமிழக பட்ஜெட்டில் சத்துணவு திட்டத்திற்கு என்று ரூ. 5,935 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கிரீம்ஸ் சாலை மைய உணவுக் கூடத்தில் இருந்து 12,000 மாணவர்களுக்கு உணவு சமைத்து அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் அட்சய பாத்திரம் அமைப்பு உணவு சமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதற்காக ஆளுநர் பன்வாரிலாலும் ரூ. 5 கோடி நிதி வழங்கியுள்ளார்.

கிரீம்ஸ் சாலையில் அமைவது இரண்டாவது உணவுக் கூடம். அட்சய பாத்திரம் அமைப்பின் முதல் உணவுக்கூடம் திருவான்மியூரில் ஏற்கனவே அமைந்துள்ளது. அங்கிருந்து தயாரிக்கப்படும் உணவு 16 பள்ளிகளில் இருக்கும் 5,090 மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

இதையடுத்து மூன்றாவதாக பெரம்பூரில் ஒரு உணவுக் கூடம் அமைய உள்ளது. இங்கிருந்து 15,000 மாணவர்களுக்கு உணவு தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சத்துணவுத் திட்டம் உலகிலேயே பிரபலமானது. அந்த உணவுத் திட்டத்தை தமிழக அரசால் நடத்த முடியாதா? ஏன் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டு இருக்கிறது என்றாலும், ஏன் டெண்டர் விடவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முதலில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பை இடையிலேயே நிறுத்துகின்றனர் என்ற செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பும் வெளியானது. தன்னார்வ தொண்டு நிறுவனம் என்று வரும்போது ஏன் அட்சய பாத்திரம் என்ற அமைப்புக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா அமைப்புக்கு சொந்தமானது.

ஏன் இஸ்கான் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. தற்போது காலை உணவு தயாரிக்க நுழைக்கப்பட்டு இருக்கும் இஸ்கான் அமைப்பை பின்னாட்களில் சத்துணவு திட்டத்திற்கும் ஏன் விரிவுபடுத்த மாட்டார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்போது சத்துணவுத் திட்டத்தில் முட்டை, வெங்காயம், பூண்டு சேர்க்கப்படுகிறது. இஸ்கான் அமைப்பு நுழையும்போது இவற்றுக்கு தடை விதிக்கப்படலாம். ஏற்கனவே கர்நாடகாவில் இந்த விஷயம் பிரச்சனைக்குள்ளானது. பள்ளிக் குழந்தைகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை இஸ்கான் தீர்மானிக்கும் நிலை உருவாகும்.

தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் ஏற்கனவே நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் அமைப்பை நுழைப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. சத்துணவு திட்டத்தை காலம் காலமாக நடத்தி வரும் தமிழக அரசே காலை உணவையும் வழங்கலாமே. தமிழக அரசால் செய்ய முடியாதது எதுவும் இல்லை.

சத்துணவு என்ற பெயரில் வழங்கப்பட்டு வரும் முட்டை எதிர்காலத்தில் ரத்தாகலாம் என்ற சூழலே உருவாகியுள்ளது. ஒடிசாவில் முட்டைக்கு இஸ்கான் அமைப்பு ‘நோ’ சொன்னது. அதேபோல் கர்நாடகாவிலும் வெங்காயம், பூண்டுக்கு ‘நோ’ சொன்னார்கள்.

தற்போது சென்னை நகரில் மட்டும் அட்சய பாத்திரம் என்ற பெயரில் காலடி வைத்து இருக்கும் இஸ்கான் அமைப்பு நாளை தமிழகம் முழுவதும் பரவுமா என்ற சந்தேகமும் எழலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here