கர்நாடகாவில் இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விடுவிக்கப்படும்; காங்கிரஸ் எதிர்ப்பு

34,563 temples in Karnataka come under the Muzrai (Hindu religious endowment) department that have been categorized as grades A, B, and C, based on their revenue generation.

0
282

கர்நாடகத்தில் இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விடுவிக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். பிற மதங்களின் வழிபாட்டு தலங்கள் சுதந்திரமாக செயல்படுவதாக குறிப்பிட்ட அவர், இந்து கோவில்கள் அரசின் சில கட்டுப்பாடுகளால் தொந்தரவை அனுபவித்து வருவதாக தெரிவித்தார்.


கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்காக கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் பாஜக அரசின் திட்டம் ‘வரலாற்று பிழை’ என்றும், அதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என்றும் கட்சியின் மாநில தலைவர்  டி.கே.சிவக்குமார் கூறினார்.


‘அவர்கள் (பாஜக) வரலாற்று தவறு செய்கிறார்கள். ஒரு துறையையோ அல்லது அரசு கோவில்களையோ எப்படி உள்ளூர் மக்களுக்கு நிர்வாகத்திற்காக கொடுக்க முடியும்? இது அரசாங்கத்தின் சொத்து. கோவில்கள் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் வருகிறது. வேறு சில மாநிலங்களைப் பார்த்து அவர்கள் என்ன அரசியல் நிலைப்பாட்டை எடுக்கப் பார்க்கிறார்கள்? 


ஜனவரி 4-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்த விவகாரம் குறித்து விவாதித்து எங்களது நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்’ என்றும் சிவக்குமார் தெரிவித்தார்.


கர்நாடகத்தில் 34 ஆயிரத்து 563 கோவில்கள், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இதில் ஆண்டுக்கு ரூ.25 லட்சத்திற்கும் அதிகமாக வருவாய் வரக்கூடிய ஏ பிரிவில் 207 கோவில்கள் உள்ளன. ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வருவாய் வரும் பி பிரிவில் 139 கோவில்களும், ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக வருவாய் வரும் சி பிரிவில் 34 ஆயிரத்து 217 கோவில்களுக்கும் உள்ளன. 


கர்நாடகத்தில் இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, இந்து சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here