கர்நாடக மாநிலம், கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வெள்ளிக்கிழமையன்று காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

கேரளம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடுபகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக கேரளத்தில் இருந்து கர்நாடகத்துக்கு பாய்ந்தோடும் கபினி ஆற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளிக்கிழமையன்று கபினி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் வியாழக்கிழமை அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக திறந்துவிடப்பட்ட தண்ணீர், வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 6 மணி அளவில் 2,280 அடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் (ஜூன் 15) கபினி அணையின் நீர்மட்டம் 2249.30 அடியாக இருந்தது. கபினி அணையிலிருந்து கூடுதலாக திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரால் தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்