கரோனா பாதிப்புகளின் உண்மையை உலகுக்கு சொன்ன பத்திரிகையாளர் மாயம் : சீனா மீது வலுக்கும் சந்தேகம்

A second Chinese citizen journalist who had been covering China’s deadly coronavirus outbreak from its epicenter in Wuhan has gone missing.

0
2152

சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிச., மாத இறுதியில் கண்டறியப்பட்ட ‘கரோனா வைரஸ்’ அந்த நகரில் வசிப்பவர்களிடம் இருந்து மேலும் பரவாமல் தடுக்க வுஹானின் எல்லைகளை மூடும் நடவடிக்கையை, கடந்த ஜன., 23ம் தேதி சீன அரசு மேற்கொண்டது.

கடுமையான பாதிப்பில் இருக்கும் வுஹான் நகரைப் பற்றிய செய்திகள் எதுவும் ஆதாரத்துடன் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், சென் கியுஷி என்ற பத்திரிகையாளர், தனது மொபைல்போன் வழியாக வுஹானின் உண்மை நிலையை சேகரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

குறிப்பாக, வைரஸ் பாதிப்பால் சக்கர நாற்காலியில் இறந்து கிடக்கும் நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆட்களின்றி சிரமப்படுவது போன்ற காட்சிகளை அவர் பதிவிட்டார்.

மேலும், வுஹான் நகரில் மக்கள் வெளியேற அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய குடியிருப்புகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மனநிலை ஆகியவற்றையும்அவர் டிவிட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த ஆவணங்கள் வழியாகத் தான், வெளியுலகிற்கு வுஹான் நகரத்தின் உண்மை நிலை தெரிய வந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்த சீன அரசு, ‘மக்களை அச்சத்தில் ஆழ்த்தும்படியான செய்திகளையும் தகவல்களையும் யாரும் வெளியிடக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, சென் கியுஷிக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், பத்திரிகையாளர் சென் கியுஷி தற்போது காணாமல் போயுள்ளார். அவரது உறவினர்கள், ‘கடந்த வியாழக்கிழமை இரவு 7:00 மணி முதல் சென் கியுஷியைத் தொடர்புகொள்ள முடியவில்லை’ என, டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக சென் கியுஷி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஒரு பெரிய அறையில் 1,000 படுக்கைகளை அடுக்குவது எளிது. ஆனால், அதில் 1,000 நோயாளிகள் எப்படி தங்கப்போகிறார்கள்? அன்றாடத் தேவைகளுக்கு என்ன செய்வார்கள்? 24 மணி நேரமும் முகமூடி அணிந்து செயல்படுவார்களா? போதுமான அளவில் ஆக்சிஜன் அவர்களுக்குக் கிடைக்குமா? போதிய அளவில் மருந்துகள் இருக்கிறதா?’ என அடுக்கடுக்காக பல கேள்விகளை அரசை நோக்கி எழுப்பியிருந்தார்.

சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணிக்கும் சீன அரசு, கரோனா வைரஸ் தொடர்பான செய்திகளைவெளியிடும் கணக்குகளை முடக்கி வந்தது. தற்போது, உண்மையை வெளிக்கொண்டு வந்த பத்திரிக்கையாளரும் மாயமாகியிருப்பதால், சீன மக்கள் அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். கரோனா விடயத்தில், சீனாவின் இந்த சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும் நடவடிக்கைகள் உலக நாடுகளின் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here