கரூர் மணவாசி சுங்கச்சாவடியில் 45 நிமிடங்கள் தகராறு : பாலபாரதி மீது புகார்

0
169

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, கரூர் மணவாசி சுங்கச்சாவடியில் 45 ரூபாய் கட்டணம் செலுத்த மறுத்ததுடன் அங்கிருந்த ஊழியர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தவறான தகவலை பரப்பியதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் சுங்கச்சாவடியில் 45 நிமிடங்கள் வரை காரை நிறுத்தி வைத்து கடைசியில் கட்டணம் செலுத்தாமல் சென்றுவிட்டதாகவும் பாலபாரதி மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

திருச்சியில் இருந்து நேற்று(சனிக்கிழமை) ஈரோட்டிற்கு முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி காரில் பயணமாகியுள்ளார். கரூர் மணவாசி சுங்கச்சாவடியை கார் அடைந்த போது அங்கிருந்த ஊழியர்கள் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளனர். அதற்கு தான் முன்னாள் எம்எல்ஏ என்று கூறி தனது அடையாள அட்டையை பாலபாரதி காட்டி தன்னை இலவசமாக அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமே கட்டணம் இலவசம் என்றும், முன்னாள் எம்எல்ஏக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் தான் இதற்கு முன்பு கடந்து வந்த சுங்கச்சாவடிகளில் எல்லாம் கட்டணம் செலுத்தாமல் வந்துள்ளதாகவும் அங்கெல்லாம் தன்னை இலவசமாக அனுமதித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், மணவாசி சுங்கச்சாவடியில் மட்டும் கட்டணம் கேட்பது ஏன் என்றும் பாலபாரதி கேள்வி எழுப்பியதாக சொல்கிறார்கள்.

இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏக்கள் என்றால் கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் எனவே 45 ரூபாய் செலுத்திவிட்டு செல்லலாம் என்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் கட்டணம் செலுத்த மறுத்த பாலபாரதி அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து அங்கு வந்த மாயனூரை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி, சுங்கச் சாவடி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணம் செலுத்தாமலேயே பாலபாரதி கார் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.

இதனிடையே முன்னாள் எம்எல்ஏக்களுக்கு கட்டண விலக்கு இல்லை என்பதை எடுத்துக்கூறியும் கேட்காமல் 45 நிமிடங்கள் பரபரப்பான சுங்கச்சாவடி பாதையில் காரை நிறுத்தி மற்ற வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தகராறு செய்தது பாலபாரதி தான் என அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊழியர்கள் தம் பணி முடிந்து வசூலான தொகையை எடுத்து செல்லும் போது பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சென்ற நிலையில், அவர்களை பார்த்து துப்பாக்கியை வைத்து தன்னை மிரட்டியதாக பாலபாரதி அபத்தமாகவும், தவறாகவும் தகவல்களை பரப்பியதாகவும் சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் பாலபாரதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் காரில் வந்த போது கரூர் மாவட்டம் மணவாசி சுங்கச்சாவடியில் அனுமதி சீட்டு இருந்தும் தனது காரை சுங்கசாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இது குறித்து சுங்கச்சாவடி ஊழியர்களுடன் பேசி கொண்டிருக்கும் போதே துப்பாகி காட்டி ஒருவர் என்னை பயமுறுத்தினார்.

இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுங்கச்சாவடியில் ஆயுதம் ஏந்திய நபர்களை வைத்திருப்பது பொது மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, ஒரு தனியார் நிறுவனம் சுங்கச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவர்களை நிற்க வைப்பது சரியான நடவடிக்கை இல்லை.

கேரளா உள்பட வட மாநிலங்களைப் போல் சுங்கச்சாவடிகளை உடனடியாக முற்றிலும் நீக்கவேண்டும். சுங்கச்சாவடிகளால் தமிழகத்தில் தொழில்கள் முடங்கியுள்ளது. முறையற்று வசூலிக்கப்படும் பணத்தை மாநில அரசு கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here