பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட கரூர் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியரான சரவணன் என்பவர், தற்கொலை செய்து கொண்டது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம்,வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த நவ.19 ஆம் தேதியன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை மீட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

இதற்கிடையில்,அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பதாக எழுதிய கடிதம் அந்த தற்கொலை குறிப்பில், தான் பாலியல் தொல்லை காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், தொந்தரவு கொடுத்ததாக எந்த நபரையும் குறிப்பிடவில்லை. இந்த கடிதத்தில் யாரையும் குறிப்பிடாததால், இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,கரூர் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியரான சரவணன் என்பவர்,திருச்சி மாவட்டம் செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து,குற்றவாளியை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில்,அப்பள்ளியின் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டுள்ளது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும்,அவரது தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here