எந்தவொரு தொடக்கத்தையும் இனிப்போடு கொண்டாடுவது நாம் பாரம்பரியமாக கொண்டிருக்கும் ஒன்று. இன்றைய இனிப்புப் பண்டங்களில் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளை சர்க்கரையைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். சர்க்கரை நோயை காரணம் காட்டி இன்று செயற்கை இனிப்பூட்டிகள்கூட பண்டங்கள் செய்யப் பயன்படுகின்றன. இவையெல்லாம் இந்தக் கால இனிப்பூட்டிகள் ஆயிற்றே…அந்தக் காலத்தில் எதைப் பயன்படுத்தியிருப்பார்கள்? வேறென்ன கருப்பட்டிதான்! பனைமரங்களிலிருந்து எடுக்கப்படும் பதநீரைக் காய்ச்சினால் கருப்பான திரவம் வரும், அதிலிருந்து பெறப்படுவதே கருப்பட்டி எனப்படும் பனைவெல்லம்.

ஆரோக்கியமான வாழ்வுக்கு அளவான இனிப்பு என்கிறது இன்றைய மருத்துவம். ஏனெனில் நாம் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரையில் கலோரிகள் அதிகம். ஆனால் கருப்பட்டியில் அதிக கலோரிகள் இல்லை, மாறாக கால்சியமும் இரும்புச் சத்தும் உள்ளது. இவை இரண்டு இரத்தத்தைச் சுத்திகரிக்கவும் எலும்பை பலப்படுத்தவும் உதவுகின்றன. நமெல்லாம் மீண்டும் உணவில் மருந்தைத் தேட ஆரம்பித்திருக்கிறோம். இந்தத் தேடலில் என்னுடைய சமையலில் கருப்பட்டியைச் சேர்ப்பதன் மூலம் ஆரம்பித்தேன்.

கேழ்வரகு கஞ்சியில் கருப்பட்டி!

எங்கள் வீட்டில் கேழ்வரகு கஞ்சிக்கு இனிப்பு சேர்க்கும் பொருள் கருப்பட்டிதான். கருப்பட்டியை சம அளவு தண்ணீரில் கலந்து மிதமான சூட்டில் வைத்து வெல்லம் உருகும்வரை காய்ச்ச வேண்டும். பிறகு, அதை சற்றே குளிரவைத்து வடிகட்டி, கஞ்சியில் சேர்க்க வேண்டும். இப்படி காய்ச்சி, வடிகட்டுவதால் வெல்லத்தில் இருக்கும் மண், தூசு நீங்கும். இந்த சுத்திகரித்த பாகை குளிர்சாதப் பெட்டியில் ஒரு வாரம்வரை வைத்தும் தேவையான பண்டங்களில் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம்! அதேபோல, உணவுப் பண்டங்கள் சூடாக இருக்கும் நிலையில் பாகை சேர்க்கக்கூடாது, உணவுப் பண்டங்கள் திரிந்துபோக வாய்ப்புண்டு.

செரிமானத்தைத் தூண்டும் பானகம்!

ஒருமுறை குடும்ப நண்பர் வீட்டில் விருந்துக்குச் சென்றபோது வரவேற்பு பானமாக, பானகத்தைக் கொடுத்தார்கள். பானகம் பசியைத் தூண்டவும் செரிமானத்தை துரிதப்படுத்தவும் செய்யும் என்றார்கள். பானகத்தை சற்றே மாற்றியமைத்து நான் ஒரு அருமையான குளிர்பானம் ஒன்றை தயாரித்தேன். ஒரு கிண்ண அளவு பனைவெல்லத்துடன், சம அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டுங்கள். இதில், இரண்டு எலுமிச்சைகளை வெட்டி சாறு பிழியுங்கள். அதோடு சிட்டிகை உப்பும், 100மிலி இஞ்சிச் சாறும் சேர்த்து மேலும் நான்கு கிண்ண தண்ணீர் சேருங்கள். இதை குளிரூட்டி, அருந்துங்கள்! இந்த பானத்தில் பனைவெல்லத்துக்கு பதிலாக பனங்கற்கண்டும் சேர்க்கலாம்.

சளி, இருமலைப் போக்கும் கருப்பட்டி கசாயம்!

சளி, இருமலுக்கு கருப்பட்டி கசாயம், சிறந்த நாட்டு வைத்தியம். ஒரு தேக்கரண்டி அளவு சுக்கு, மிளகு, சீரகத்தை பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஐந்து கிண்ண நீரில் இந்தப் பொடியுடன் கால் கிண்ண பனைவெல்லத்தைப் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி அருந்தினால் சளி, இருமலின் உக்கிரம் குறையும்.

கருப்பட்டி கேக்!

‘என்னது…கருப்பட்டியில் கேக்கா?’ எனப் பதற வேண்டாம். இந்தச் சுவையான கருப்பட்டி கேக் என் மகனுக்கு மிக பிடித்த ஒன்று. இதோ குறிப்பை சொல்லுகிறேன்.

கோதுமை மாவு – ஒரு கிண்ணம்
ரவை – கால் கிண்ணம்
பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
பேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி
துருவிய பனைவெல்லம் – ஒரு கிண்ணம்
தேங்காய்த் துருவல் – கால் கிண்ணம்
சூரியகாந்தி எண்ணெய் – முக்கால் கிண்ணம்
தண்ணீர் – ஒரு கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி – ஒரு தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

கோதுமை மாவுடன் ரவை, பேக்கிங் பவுடர், சோடா சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். துருவிய வெல்லத்துடன் எண்ணெய், தண்ணீர்ச் சேர்த்து கலக்கியின் துணையுடன் கலக்கவும். இதில் ஏலக்காய்ப் பொடி, வெனிலா எசன்ஸ், வறுத்த தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையில் முன்பு கலந்த மாவுக்கலவையைக் கொட்டி நன்றாகக் கலந்து அவனில் வைக்க வேண்டும்.
முன்னரே சூடாக்கிய அவனில் 140 டிகிரி செல்சியஸ் சூட்டில் 40-45 நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுவையான கேக் தயார்!

இதுபோல, கருப்பட்டியை நவீன உணவுப் பண்டங்களிலும் சேர்த்து பயன்படுத்தலாம். நலன் மிக்க நம் பாரம்பரிய உணவுப் பொருட்களை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தால் ‘உணவே மருந்து’ என்று நம் முன்னோர் சொன்னதற்கான அர்த்தத்தை நாம் அனுபவப்பூர்வமாக உணரலாம். அடுத்தடுத்து நான் சொல்லப்போவதும் அதைத்தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here