கருத்துரிமையில் கைவைக்கும் தணிக்கைக்குழு

0
303
Vijay

மத்திய அரசின் கைப்பாவையா தணிக்கைத்துறை?

இந்தியாவில் தணிக்கைக்குழு, காவல்துறை, வருமானவரித்துறை, சிபிஐ என்று அனைத்து அரசு எந்திரங்களும் ஆளும்வர்க்கத்தின் விருப்பங்களை செயல்படுத்தும் கருவிகளாகவே இருந்து வந்திருக்கின்றன. நேரு தலைமையிலான ஆட்சிக்காலத்தில் இருந்த சுதந்திரம் மேற்சொன்ன துறைகளுக்கு பிறகு இருந்ததில்லை. காங்கிரஸ் கட்சி தயக்கத்துடன் இந்தத்துறைகளை பயன்படுத்திவந்த நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசு முழுவீச்சில் தங்களின் கட்சி அமைப்புகளைப் போன்று இந்தத்துறைகளை கையாள்கிறது. தங்களின் அரசியல் செயல்திட்டத்தை நிறைவேற்ற சட்டத்துக்கும் நீதிக்கும் புறம்பான வகையில் வருமானவரித்துறை, சிபிஐ மற்றும் தணிக்கைக்குழுவை பாஜக பயன்படுத்துகிறது. உதாரணத்துக்குதான் இவை மூன்றும். கல்வி, கலாச்சாரம் என்று அவர்கள் கையாடல் செய்யாத துறைகள் இல்லை.

பாஜக மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு கலைத்துறையில் அதன் ஊடுருவல் அதிகரித்துள்ளது. புனே திரைப்பட கல்லூரியின் முதல்வராக எந்தத் தகுதியும் இல்லாத தங்களின் கட்சி அபிமானியை நியமித்ததில் தொடங்குகிறது அதன் அத்துமீறல். கலைஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர் என அனைத்து அறிவுசார் மக்கள் போராடியும் மோடி தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இப்போது புனே திரைப்பட கல்லூரியின் முதல்வராக பதவியேற்றிருக்கும் அனுபம் கேர் வெளிப்படையான மோடி ஆதரவாளர். மோடி அரசில் முற்போக்காளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கும் சூழலை கண்டித்து எழுத்தாளர்களும், கலைஞர்களும் தங்களுக்குக் கிடைத்த அரசு விருதுகளை திருப்பியளித்த போது, மோடிக்கு முட்டுக்கொடுக்கும்வகையில் பேரணி நடத்தியவர் அனுபம் கேர்.

தணிக்கைத்துறையிலும் மோடி அரசு தனது காவிமயத்தை எப்போதோ ஆரம்பித்துவிட்டது. மத்திய அரசுக்கு வலிக்கும் சின்ன வார்த்தையையும் தணிக்கைக்குழு அனுமதிப்பதில்லை. மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த விமர்சன வரிகள் எந்தளவுக்கு பிரச்சனையாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். மெர்சலின் தெலுங்குப் பதிப்பான அதிரிந்தி வெளியாக தாமதமானதற்கு தணிக்கைக்குழுவே காரணம்.

தமிழில் அனுமதிக்கப்பட்ட வசனத்தை தெலுங்கில் அதிகாரப்பூர்வமாக நீக்கச் சொல்ல முடியாது என்பதால், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்களை நீங்களே மியூட் செய்யுங்கள், அதன் பிறகே தணிக்கைச் சான்று தருவோம் என தணிக்கைக்குழு படத்தின் தயாரிப்பாளரை கேட்டுக் கொண்டது. இது ஒருவகையான மிரட்டல். நீங்களாக மியூட் செய்யாதவரை தணிக்கைச்சான்று கிடைக்காது. ஒருகட்டத்துக்கு மேல் தணிக்கைக்குழுவுடன் போராட முடியாத நிலையில், தயாரிப்பு தரப்பே அதிரிந்தியில் வரும் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்களை மியூட் செய்து தணிக்கைக்கு அனுப்பியது. அதன் பிறகே படத்துக்கு சான்றிதழ் கிடைத்தது. தணிக்கைக்குழுவைப் பொறுத்தவரை, அவர்கள் எதையும் நீக்கவுமில்லை, மியூட் செய்யவுமில்லை, தயாரிப்பாளரே சர்ச்சைக்குரிய வசனத்தை மியூட் செய்துவிட்டார். தணிக்கையின் அதிகாரம் எத்தகையது, அது எந்தளவுக்கு கருத்துரிமையின் குரல்வளையை அதிகாரப்பூர்வமாகவே நெரிக்கும் என்பதற்கு இது ஒருசோறு பதம்.

விஜய் ஆண்டனி நடித்திருக்கும் அண்ணாதுரை படமும் இதேபோன்ற நெருக்கடியை சந்தித்திருக்கிறது. வரும் 30 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பாடல்களை நேற்று வெளியிட்டனர். அதில் அருண்பாரதி எழுதியிருக்கும் பாடல், ‘ஜிஎஸ்டி போல நீயும் என்னை வச்சு செய்ற’ என்று தொடங்குகிறது. ஜிஎஸ்டி என்ற வரியை நீக்கினால் மட்டுமே சான்றிதழ் என்று தணிக்கைக்குழு கெடுபிடி செய்ய வேறு வழியில்லாமல் ஜிஎஸ்டியை இஎம்மை என்று மாற்றியுள்ளனர். பிரதமர் முதல் பிச்சைக்காரன்வரை பேசிக்கொண்டிருக்கும் ஜிஎஸ்டி குறித்து ஒரு திரைப்படத்தில் எழுதக் கூடாதா? ஜிஎஸ்டி என்ன புனிதப்படுத்தப்பட்ட வார்த்தையா? இணையத்திலும், அச்சு ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அடித்து துவைக்கப்படும் ஒரு விஷயத்தைக் குறித்து திரைப்படத்தில் ஒரு வரியே வைக்கக் கூடாது என்பது என்ன விதமான அதிகாரம்? தணிக்கைக்குழுவின் இந்த அடாவடியை யார் தட்டிக் கேட்பது?

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 13 ஜுரிகள் சேர்ந்து ஒருமனதாக தேர்வு செய்த நியூட், செக்ஸி துர்கா படங்களை திரையிடக் கூடாது என்று மத்திய தகவல் ஒளிபரப்புதுறை தடுத்திருக்கிறது. இந்த அத்துமீறலை கண்டித்து நடுவர் குழுவின் தலைவர் உள்பட நான்கு பேர் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

கோவையில் தமிழக ஆளுநர் மரபை மீறி ஆய்வு செய்கிறார், கோவாவில் நடுவர்களை மீறி மத்திய அமைச்சகம் முடிவுகளை எடுக்கிறது.

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா இல்லை சர்வாதிகாரத்தின் பிடியில் இருக்கிறோமா?

இதையும் படியுங்கள் : சர்வதேச திரைப்பட தேர்வில் மத்திய அரசின் தலையீடு – தேர்வுக்குழு தலைவர் ராஜினாமா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்