கருத்துச் சுதந்திரத்தை அழிக்கும் முயற்சியில் ஜேஎன்யு துணைவேந்தர் முக்கிய பங்கு வகிப்பதாக கூறி பிரபல பொருளாதார பேராசிரியர் ராஜினாமா

0
387

கருத்துச் சுதந்திரத்தை அழிக்கும் முயற்சியில் ஜேஎன்யு துணைவேந்தர் குமார் முக்கிய பங்கு வகிக்கிறார் என்று குற்றம் சாட்டி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்த பிரபல பொருளாதார நிபுணர் அமித் பாதுரி தனது கவுரவ பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போதைய நிலைமையை பல்கலைக்கழக நிர்வாகம் தவறாகக் கையாண்டுவருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜேஎன்யுவின் துணைவேந்தருக்கு எழுதிய கடிதத்தில், பல்கலைக்கழக நிர்வாகம் கருத்து வேறுபாடுகளைத் தூண்டிவருவதாக பாதுரி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 

பாதுரி, 1973 இல் ஒரு இளம் பேராசிரியராக பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபின் 2001 இல் அதை விட்டுவிட்டார். பின்னர் மீண்டும் பல்கலைக்கழகம் அவரை அழைத்தது. கவுரவ பேராசிரியராக நியமித்தது.

பேராசிரியர் அமித் பாதுரி ஜேஎன்யூ துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளதாவது:

”இது எனக்கு வேதனை அளிக்கிறது. இந்த பெரிய இடத்தில் ஒரு அமைதியான பார்வையாளராக இருந்துகொண்டு என் எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருப்பது என் பங்கில் ஒழுக்கக்கேடானது என்றே நான் நினைக்கிறேன். கருத்து வேறுபாடுகளைத் தூண்டும் வகையில் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருக்கிறது.

எனவே நான் ஜே.என்.யுவில் இதுநாள் வரை பணியாற்றிவந்த எனது எமரிட்டஸ் பேராசிரியர் பதவியை விட்டுவிடுகிறேன்.

ஜே.என்.யுவில் பணியாற்றிய ஆண்டுகளில், பல்கலைக்கழகம் நியாயப்படுத்தப்பட்ட அல்லது நியாயப்படுத்தப்படாத மாணவரின் அமைதியின்மை மற்றும் தற்காலிகமாக கற்பித்தல் நிறுத்தப்பட்டது உட்பட பல்வேறு கட்டங்களை நான் கடந்து வந்துள்ளேன்.

இப்போது வேறுபாடு என்னவென்றால், அதிகாரிகளால் சூழ்நிலைகளைக் கையாளுவதில் இயலாமை மட்டுமல்ல, விவாதத்தின் சுதந்திரமான மற்றும் உயிரோட்டமான சூழ்நிலையையையும் மற்றும் நாடு முழுவதும் அறியப்பட்ட ஜே.என்.யு விவாதத்தையும் குலைப்பதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சி அங்கு நடந்துகொண்டிருக்கிறது.

கருத்துச் சுதந்திரத்திற்கான சூழ்நிலையை அழிக்க நிர்வாகம் தற்போது முயற்சித்து வருவது ஒரு பெரிய மற்றும் மோசமான திட்டத்துடன் ஒத்துப்போகிறது, அதில் ஜேஎன்யு துணைவேந்தரின் பங்கு முக்கிய பகுதியாகத் தோன்றுகிறது.

உங்கள் நிர்வாகத்தின் குறுகிய கண்ணோட்டத்தை அமல்படுத்துவதில் நீங்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது, அதனால்  மாணவர்களுக்கு மற்ற எல்லாக் கதவுகளையும் மூடிவிடுவீர்கள்

 பொருளாதார நிபுணரான எனக்கு அளிக்கப்பட்ட இந்தக் கவுரவத்தை ஜேஎன்யூ நிர்வாகத்திற்கு திருப்பி அனுப்புவதுதான் அவர்களுக்கு சரியான செய்தியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

இது குறித்து பதிலளித்த ஜே.என்.யு துணைவேந்தர் எம்.ஜகதேஷ்குமார் கூறுகையில் இதுபோன்ற ஒரு கடிதத்தை எனது அலுவலகத்தில் இதுவரை நான் பார்த்ததில்லை. ஒரு கெளரவ பதவியான எங்கள் எமரிட்டஸ் பேராசிரியர்களின் பங்களிப்புகளை நாங்கள் பாராட்டுகிறோம். இருப்பினும், அவர்களின் நேர்மையான முடிவுகள் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here