பிறவிப் போராளியான கருணாநிதியின் மனோதிடம் வெற்றி பெற்றுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், காவேரி மருத்துவமனை சென்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிறவி போராளியான திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். என தெரிவித்தார்.

ஜூலை 29-ஆம் தேதி மாலை அவரது இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலை சீரானது.சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. 6-வது நாளாக கருணாநிதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை 10 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் விஜய், மாலையில் வந்த நடிகர் அஜித் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக்தள் கட்சியின் தலைவருமான அஜீத் சிங், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், நடிகர்கள் கவுண்டமணி, விவேக், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, சென்னை மயிலை மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here