உடல்நலம் குன்றிய நிலையில் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , 11வது நாளாக சிகிச்சையில் இருந்த போது காலமானார்.
21

கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு , ஜூலை 18-ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி குழாயை மாற்றிவிட்டு, புதிய குழாய் பொருத்தப்பட்டது. அன்றைய தினமே கருணாநிதி வீடு திரும்பினார்.

தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை மாற்றியதை தொடர்ந்து,சிறு நீரக நோய்த் தொற்றும் காய்ச்சலும் ஏற்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

பிறகு திடீரென ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ஜூலை 28-ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஜூலை 29-இல் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டபோதும், தீவிர சிகிச்சையில் அவரின் உடல் நலம் சீரானது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆக.5) இரவிலிருந்து கருணாநிதியின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. கடும் நோய் தொற்றால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாகவும் அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளிவந்தது.

இதையடுத்து காவேரி மருத்துவமனை திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதுமை தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக, அவரது முக்கிய உடலுறுப்புகளின் செயல்பாட்டை மருத்துவ ரீதியாகச் சமாளிப்பது சவாலாக உள்ளது. கருணாநிதிக்கு தொடர் கண்காணிப்பும் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ சிகிச்சைகளை அவரது உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டிருந்தது .

கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலமானார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்