தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அவரது இல்லத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என காவேரி மருத்துவமனையின் அறிக்கையை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மு.க.அழகிரி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

கடுமையான சுவாச பிரச்சனையின் காரணமாக கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று (ஆகஸ்ட் 7) 11-வது நாள். அவரது உடல்நிலைத் தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக புதிய மருத்துவ அறிக்கை ஒன்றை காவேரி மருத்துவனை நேற்று மாலை (திங்கள் கிழமை) 6.30 மணிக்கு வெளியிட்டது.

அந்த மருத்துவ அறிக்கையில் திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் அவரது வயதின் காரணமாக அவரது உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது கடினமாக உள்ளது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது

அவர் தொடர் கண்காணிப்பு மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். மருத்துவ சிகிச்சைகளை அவரது உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரிய வரும் என்றும் அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 18-ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி குழாயை மாற்றிவிட்டு, புதிய குழாய் பொருத்தப்பட்டது. அன்றைய தினமே கருணாநிதி வீடு திரும்பினார்.

தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை மாற்றியதை தொடர்ந்து, நோய்த் தொற்றும் காய்ச்சலும் ஏற்பட்டது. பிறகு திடீரென ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ஜூலை 28-ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் ரத்தத்தில் கலந்துள்ள கடும் நோய்த்தொற்று (சீரியஸ் செப்ஸிஸ்’) கலந்துள்ள போதிலும், ஜூலை 29-இல் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டபோதும், தீவிர சிகிச்சையில் அவரின் உடல் நலம் சீரானது. கடந்த ஆக.2-இல் கருணாநிதியின் ரத்த இயக்கங்களைச் சீராக்கும் முயற்சியாக அரை மணி நேரம் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஆக.5) இரவிலிருந்து கருணாநிதியின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.

கருணாநிதிக்கு கடும் நோய் தொற்றால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாகவும் கல்லீரல் சிகிச்சையில் பிரபலமான நிபுணர் முகமது ரேலா மூலமாக சிகிச்சை வழங்கபடுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின.
அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டு இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.

இந்த நிலையில் திங்கள் கிழமை அவரது நாடி துடிப்பிலும் சற்று தொய்வு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் தட்டணுக்கள் குறைந்து வருவதால், கருணாநிதிக்குச் செலுத்தப்படும் மருந்துகள் மெதுவாகவே செயல்படுகின்றன.

கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதும், அவர் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி ஆகியோர் கருணாநிதியின் காரிலேயே தயாளு அம்மாளை அழைத்து வந்தனர்.

கருணாநிதியின் உடலில் தொய்வு ஏற்ப்பட்டதை அடுத்து தலைவர், தொண்டர்கள் வருகை அதிகரித்ததால் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இருந்து லஸ் செல்லும் பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. மருத்துவமனை முன் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவலர்கள் அனைவரையும் இரவு முழுவதும் பணியில் இருக்குமாறு காவல்துறை உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலை முதல் கருணாநிதி குடும்பத்தினர் காவேரி மருத்துவமனையில் இருக்கிறார்கள் . வெளியூர்களில் இருந்தும் ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here