திமுக தலைவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு விரைவாக கலைந்து செல்லுங்கள் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல் நலக்குறைவால், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணிக்கு காலமானார்.

தற்பொழுது சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அத்துடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்து தங்களது தலைவருக்கு இறுதி அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர் .

மக்கல் கூட்டம் அதிகரித்தால் விஐபி.க்கள் செல்லும் வாசல் வழியாக மக்கள் நுழைய முயன்றதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் மரணமடைந்தனர். அத்துடன் எட்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பிறகு விரைவாக கலைந்து செல்லுங்கள் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நமது தலைவரின் உடலை அடக்கம் செய்வதற்காக மெரினா கடற்கரையில் இடம் கேட்டு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. கருணாநிதியை அடக்கம் செய்வதற்கான இடத்தின் உரிமையை சட்டப் போராட்டம் மூலமாக பெற்றிருக்கிறோம். உயர் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்.

தனது வாழ்நாளில் இட ஒதுக்கீடு கேட்டு போராடியவர், இறப்பிற்குப் பிறகும் இட ஒதுக்கீட்டிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இறுதி அஞ்சலி செலுத்த அதிக அளவில் தொண்டர்கள் கூடியுள்ளதால் ஒரு சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கின் சுவர் ஏறிக் குதிக்க வேண்டாம் என்று தொண்டர்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.

இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு உடனே கலைந்து செல்லுங்கள்.அப்போதுதான் குறிப்பிட்ட நேரத்தில் இறுதி ஊர்வலத்தை துவக்க இயலும். ஒரு சகோதரனாக இதைநான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here