கம்பீர் மீது ஆம் ஆத்மி வழக்கு; பதிலுக்கு கெஜ்ரிவால் மனைவி மீது பாஜக வழக்கு

0
184

டெல்லி கிழக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் வழக்குத் தொடுத்ததற்கு பதிலுக்கு பதிலாக, கெஜ்ரிவால் மனைவி மீது பாஜக வழக்குத் தொடுத்துள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் சமீபத்தில்  டெல்லி கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது பிரமாணப் பத்திரம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

அதேசமயம் கவுதம் கம்பீரிடம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாகக் கூறி, அத்தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷி சார்பில் டெல்லி திஸ்ஹசாரி பாக் நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர் தனது புகாரில் கூறியுள்ளதாவது:

கவுதம் கம்பீர் டெல்லியில் இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டைகள்  வைத்துள்ளார். டெல்லி ராஜேந்திர நகர் மற்றும் கரோல் பாக் என இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருக்கிறது. இதற்கு சட்டப்படி ஓராண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்க வழியுண்டு. எனவே கவுதம் கம்பீரை தகுதியிழப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கவுதம் கம்பீர் தரப்பில் மறுப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் கவுதம் கம்பீர் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் வழக்குத் தொடுத்ததற்கு பதிலுக்கு பதிலாக, கெஜ்ரிவால் மனைவி மீது பாஜக வழக்குத் தொடுத்துள்ளது.

பாஜக தலைவர் ஹரிஷ் குரானா டெல்லி திஸ்ஹசாரி  நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கிரிமினல் புகாரில் கூறியுள்ளதாவது:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் பெயர் டெல்லி சாந்தினி சவுக் பகுதி மற்றும் உத்தர பிரதேசத்தின் காசியாபாத் ஆகிய  இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.

எனவே அவருக்கு இதுதொடர்பாக சம்மன் அனுப்பி விசாரித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here