கேரள கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கேரள அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமித்த நிலையில், பிஷப் பிராங்கோ முலாக்கல் -க்கு எதிராகப் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், கோட்டயம் கான்வென்ட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, இயேசு மிஷனரிகள் திருச்சபையின் தலைவர் ரெஜினா கடம்தொட்டு, கன்னியாஸ்திரிகளுக்குத் தனித்தனியாக இட மாற்ற உத்தரவுகளை அளித்துள்ளார்.

கன்னியாஸ்திரி அனுபமா கேலமங்கலது வெளியில் பஞ்சாபில் இருக்கும் கான்வென்டில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கன்னியாஸ்திரி அங்கிதா உரும்பில் கன்னூரில் உள்ள பரியாரம் பகுதியிலும் கன்னியாஸ்திரி ஆல்பி பல்லச்சேரில் பீகாரில் உள்ள பகர்தலா பகுதியில் பணிபுரிய வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாஸ்திரி ஜோசபைன் வில்லூன்னிக்கல் ஜார்கண்டில் லால்மாட்டியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி நினா ரோஸ் மட்டும் எந்தவித உத்தரவுக்கும் ஆளாகவில்லை.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தேவாலய பேராயர் பிராங்கோ முலாக்கல் மீது கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

புகார் குறித்துக் கூறிய கன்னியாஸ்திரி, கடந்த 2014-இல் கேரளத்தின் குருவிளங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லம் அருகே உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் வைத்து தன்னிடம் முதல் முறை அத்துமீறியதாகவும், பயத்தின் காரணமாக வெளியே சொல்லாமல் இருந்ததை பிராங்கோ பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறினார். மேலும் அவர் 13 தடவை தன்னிடம் அத்துமீறிய இடம், நேரம் என அனைத்துத் தகவல்களையும் காவல்துறையிடம் விளக்கியுள்ளார்.

2014 முதல் 2016 வரை நடைபெற்ற இச்சம்பவம் குறித்து கன்னியாஸ்திரி கொடுத்த புகாரின் பேரில் பேராயர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தங்கிய விடுதியில் இருந்த மற்ற கன்னியாஸ்திரிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here