கன்னித்திரையிலா இருக்கிறது பெண்களின் புனிதம்: சார்வி சானு

1
2749

விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
மனிதர்களின் கண்டுபிடிப்புகளும், சமூக மாற்றங்களும் அதற்கேற்ப வளர்ந்து
கொண்டே செல்கின்றது..

ஆனால் பெண்களின் நிலை.. ?

உங்கள் கண்களுக்கு வேண்டுமானால் கல்பனா சாவ்லாக்களும் , சானியா
மிர்சாக்களும் மட்டுமே தெரியலாம்..

ஆனால் என் கண்களுக்கு தினம் தினம் வியர்வை வழிய வேலைக்குச் செல்லும்
பெண்களும் மேலதிகாரிகளால் தினம் தினம் பாலியல் சீண்டல்களுக்குள்ளாகும்
பெண்களும்தான் பெரும்பாலும் தெரிகிறார்கள்..

“இப்போல்லாம் யாரு சார் சாதி பாக்குறா” என்கிற மாதிரிதான் “இப்போல்லாம்
யாரு சார் பொண்ணுங்கள கொடுமைப்படுத்துறாங்க” என்கிற மனப்பான்மையும் …

இப்பொழுதும் சில படித்த நடுத்தர வர்க்கத்தின் குடும்பங்களில் பல விதமான
கொடூரங்கள் பெண்களுக்கெதிராக அரங்கேறிக் கொண்டுதானிருக்கின்றன. அதில்
முக்கியமானது கன்னித்திரை குறித்த மூடத்தனம்..

பெண்களின் கன்னித்திரை முதலிரவில் கிழிந்து இரத்தம் வருவது தான்
பெண்களுக்கான புனிதம் எனும் கற்பிதம் இன்றளவிலும் பெரும்பாலானோர் மனதில்
இருக்கின்றது..

வேடிக்கையாக உள்ளது இக்கூற்று.

முதலிரவுக்கு செல்லும் பெண்களுக்கு வெள்ளை [அ] சந்தனக்கலர் பாவாடை தான்
அணிந்து போக வேண்டும் என முழக்கமிடும் மாமியார்கள் இன்னும் இருக்கத்தான்
செய்கிறார்கள். அதுவரை செக்ஸ் குறித்து தன்னிடம் பேசாத அம்மாகூட தனியாக
கூட்டிச் சென்று புலம்புகிறாள். “பார்த்துக்கொள் அப்புறம் உன் மாமியார்
கேட்குற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.கணவனோடு நன்கு
ஒத்துழை” என்று சொல்லும் அவள் கண்களில் விடியலில் பாவாடையில் இரத்தக்கறை
இருக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும்.

நான்கு தோழிகள் கலகலப்புடன் சிரித்து “ஏய் பார்த்துக்கோடி”என கேலியுடன்
உள் அறையில் தள்ளிவிடுவார்கள்.வெட்கத்துடன் செல்வாள்.கணவர் காலில்
விழுவாள்.கணவர் தோள் தொட்டு தூக்குவார்.அப்படியே கட்டி
அணைப்பார்.அவ்வளவுதான் கேமரா நகர்ந்து இருபூக்கள் தலைசாய்த்து ஒட்டிக்
கொள்ளும் சீனோ [அ]ஒரு பாப்பா வாயில் ஒரு விரல் வைத்து பார்க்கும் படமோ
காட்டப்படும். விபரம் அறியா பெண்களி்ன் முதலிரவு என்பது இது தான். காலை
கணவர் வீட்டின் பெண்கள் யாராவது ஒருவர் நோட்டமிட வந்து விடுவார்கள் .ஒரு
துளி இரத்தமாவது அவர்கள் கண்ணில் தென்பட்டால் தப்பி்த்தாள்.
இல்லையென்றால் பெரும்பாடுதான்.
இப்படி தான் மாட்டிக்கொண்டாள் என் தோழி
திவ்யாவும். உங்க பொண்ணு கெட்டு போனவங்க என்று கூச்சமே இல்லாமல்
பெற்றோர் முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டு தன் மகனை கூப்பிட்டு
கொண்டு போய்விட்டாள் அவளின் மாமியார். மகனை நச்சரித்து விவாகரத்து
நோட்டீசும் அனுப்பி விட்டார்கள். கோர்ட் உத்தரவின்படி முதல்கட்ட
கவுன்சலிங் டாக்டரிடம் சென்றார்கள். கவுன்சலிங்கில் அவள் கல்லூரி
காலத்தில் வாலிபால் பிளேயர் எனவும் அதுவுமில்லாம் 5கி.மீ தொலைவில் உள்ள
கல்லூரிக்கு தினமும் சைக்கிளில் சென்று வந்தாள் என்றும் தெரிந்தது.
பின்பு டாக்டரின் கவுன்சலிங் மாமியாருக்கு தான் வழங்கப்பட்டது. புரிய
வைக்கப்பட்டு பின்பு திவ்யா கணவனுடன் சேர்த்து “வாழ வைக்கப்பட்டாள்”.
புரட்சி புதுமை என பேசும் பெண்ணாய் அவள் இருந்திருந்தால் கணவனின்
இச்செயலுக்கு அவனுடன் சேர்ந்து வாழ நினைத்து இருக்கமாட்டாள்.

ஆனால் அவளின் கன்னித்திரையும் அன்று கிழிக்கபட்டது அல்லவா?
பெற்றோரின் கண்ணீருக்கு தயாரனாள் சேர்ந்து வாழ…

பொதுவாக அதிக அலைச்சலில் பணி மேற்கொள்ளும் பெண்களுக்கு இயற்கையாகவே
கன்னித்திரை கிழிதல் என்பது சாத்தியக்கூறு தான். இதில் புனிதத்தைக்
கண்டுபிடித்த கோமாளி கூட்டங்களைத் தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

கன்னித்திரையில் தான் புனிதம் என்று பெண்களே கூவுவது தான் கொடுமையிலும் கொடுமை.
இப்புனிதத்தை ஒருவன் தான் தீண்ட வேண்டும் என்றால், தவறே செய்யாத பாலியல்
கொடுமைகளுக்கு உள்ளாகும் அனைத்து பெண்களும் புனிதத் தன்மை அற்றவர்களா..?
மனதளவில் அவர்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதா என்ன..?

இங்கு பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்ணைக் கண்டு ஒரு வாரத்திற்கு
வேதனைப்பட்டு பின் மறந்து போகும் கூட்டத்தை விட, அவள் அதன் பின் இறந்து
போவதே மேல் என நினைக்கும் சில பெற்றோரி்ன் நிலைப்பாடு தான் என்னை
அச்சுறுத்துகிறது ..
கேட்டால் கெட்டு போன பெண்ணை எவன் மணப்பான்?ஆணாதிக்க மனோபாவத்தில் தவறான
விதையை நாமே தூவிவிட்டு பின் புலம்பி என்ன பயன்?

இங்கு கன்னித்தன்மை என்பது என்ன ??

அவள் போடும் ஆடை முதல் செருப்பு வரை டிசைன் செய்தது யார்??

எங்கள் வீட்டின் அருகில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது
சிறுமியை குடிபோதையில் தூக்கி கொண்டு போய் வன்புணர்வு செய்கிறான் 68 வயது
ராஜேந்திரன்.அவன் மனைவியே பார்த்து கதறுகிறாள். அவன் இரு மகன்களே
போலீசுக்கும் தகவல் தருகிறார்கள். பிறப்புறுப்பில் இரத்தம் வடிய மயங்கிய
நிலையில் இருந்த அபியைத் தூக்கி தாய் கதறுகிறாள்.

அப்பொழுதும் அவள் சிறுமியின் எதிர்காலத்தை நினைத்துதான் கதறுகிறாள், “இனி
என் அபியை யார் கட்டுவார்கள்” என்று.

படிக்காத அந்த தாயின் மனோநிலையும் புனிதம் என்னும் கன்னித்திரையில் மேல்
உள்ள வடிவமைப்பும் தான் மகளின் எதிர்காலத்தை குறித்து ஒரு கேள்வியாய்
வருகிறது?
ஒரு கத்தியோ ,பிளேடோ உன் கையைக் கிழித்து
விட்டால் நீ அழுகிறாயா? இல்லை அல்லவா.. மருந்து போட்டு ஆற்றி கொள்கிறாய்
அல்லவா.. அது போல நான்கு சொறி நாய்கள் உன்னைக் கடித்து விட்டதாக
நினைத்துக் கொள்.. இது ஒன்றும் உன் தவறல்ல.. மன திடத்துடன் இவ்வலியை
எதிர் கொள் என்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் கூறிப்பாருங்கள்.
தங்களுக்குள் எழும் தாழ்வு மனப்பான்மையை அவர்களே விட்டொழிவார்கள்.

ஆனால் நாம் செய்வது என்ன ?

அதோடு அவள் வாழ்க்கையை ஒரு கேள்விக் குறி போல் பார்ப்போம். எல்லாம்
புனிதத் கன்னித்திரையி்ன் போலி பிம்பப் பார்வைகள்.

என்னுடன் பணியாற்றிய என் தோழி சுமித்ரா எனக்கு போன் செய்தாள். அப்போது
தான் அவளுக்கு புதிதாய் மணமாகி இருந்தது. எங்கள் இருவர் உரையாடலில் அவள்
சொன்ன செய்தி ஒன்று என்னைத் தூக்கி வாரிப் போட்டது. முதல் உடலுறவின்
போது கன்னித்திரை கிழிந்து ரத்தம் வர வேண்டும்.அப்படி வரவில்லையென்றாலும்
வந்ததாக உன் மாமியாரிடம் சொல் என்று அம்மா கூறினாள் .எனக்கு வரவில்லை
…எதற்கு திவ்ய மாதிரி நானும் பிரச்சனையில் மாட்ட வேண்டும் என்று
நினைத்து என் விரலைக்கீறி பாவாடையில் இரத்தத்தை விட்டுக்கொண்டேன் என்றாள்
.

இது ஒரு பேராசிரியையின் செயல்பாடா ? என்று ஒரு நிமிடம் கோபம் கூட வந்தது.
புனிதத்தைக் கண்டறிய கழுகுகளாய் திரியும் கூட்டத்திடம் இருந்து தப்ப
வேண்டும் என்ற நிலைப்பாடின் சாயலே இவள் செய்கை என உணர்ந்தேன் ..

பொய்யான ஒரு புனிதம் படித்தவர்களை கூட விபரீதமாக தான் யோசிக்க
வைக்கிறது.சுமித்ரா விற்கும் அபியின் அம்மாவிற்கும் எண்ண ஓட்டத்தில்
பெரிய வித்தியாசம் இல்லை என்றே தோன்றியது.

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது ஏ பயோவிற்கும் பி குரூப்பிற்கும்
ஒண்ணா கிளாஸ் எடுக்க போறாங்களாம்.
மைதிலி மேம் எல்லாரையும் ரூம் நெம்பர் 12 க்கு வர சொன்னாங்க என்று வந்து
சொல்லிவிட்டு ஒடினாள் செல்வி. அனைவரும் சேர்ந்தோம். அன்று மேம்
எங்களுக்கு செக்ஸ் எஜூகேஷன் சம்பந்தமாக வகுப்புகள் எடுத்தார். அது எங்கள்
புத்தகத்தில் ஒரு பாடப்பகுதியாகவே இருந்தது. அரைமணி நேர வகுப்பே அது.
அவரிடம் நிறைய தயக்கங்கள் இருந்தது இது பற்றி பேச..

எங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை அப்போது. மனப்பாடம் செய்துக் கொண்டோம்.
ஆனால் இப்போது புரிகிறது ஆசிரியர் பேச தயக்கம் காட்டுவது தவறு என்று.

சில விடயங்களின் வெளிபடைத்தன்மையே பல விடயஙகளுக்கு தீர்வாக இருக்க முடியும்.

புனிதம் என்பது கன்னித்திரை கிழிந்து வரும் குருதியில் அல்ல.. அது
வராவிட்டாலும் நாம் பெண்களை புரிந்துக் கொள்ளும் மனதில்தான் உள்ளது …

அதுசரி..

“இப்போலாம் யாரு சார் பொண்ணுங்கள கொடுமைப்படுத்துறாங்க….”

1 கருத்து

  1. ஆமாம் சகோ…
    அந்த காலத்தில் முதலிரவுக்கு செல்லும் பெண்களின் கன்னித்தன்மையை கண்கானிக்க படுக்கையில் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் துணிகளை விரிப்பார்கள்.. ஆனால் இன்றைய காலமும் அறையை காலமும் ஒன்றா.?
    மூன்று நான்கு வயதுதுகளிலேயே பரதநாட்டியம் முதற்கொண்டு நீச்சல் வரை அனைத்தையும் தன் பிள்ளைகள் கற்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். பூவை விட மென்மையானவள் பெண். ஆனால் அவள் உடல் மட்டும் என்ன இரும்பிலானதா.? இவர்கள் எல்லாம் என்றுமே திருந்த மாட்டார்கள்.

ஒரு பதிலை விடவும்