கதுவா சம்பவத்தை ஒரு சின்ன விசயம் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை முதல்வர் கவிந்தர் குப்தா.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கதுவாவில் எட்டு வயது சிறுமியைக் கோவிலுக்குள் அடைத்து வைத்து, இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொன்ற சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் லால் சிங் மற்றும் சந்திர பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். இதனால் எழுந்த எதிர்ப்பையடுத்து, இருவரும் பதவி விலகினர்.

மேலும், துணை முதல்வராகவிருந்த பாஜகவைச் சேர்ந்த நிர்மல் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, கவிந்தர் குப்தா புதிய துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கவிந்தர் குப்தா, “கதுவா சம்பவம் ஒரு சின்ன விசயம். இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரக் கூடாது” எனக் கூறியுள்ளார். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தை ஒரு சாதாரண விசயம் என பாஜக துணை முதல்வர் கூறியிருப்பதை பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”