#கதிராமங்கலத்தில் இதுவும் நடந்தது; ஓ.என்.ஜி.சிக்கு இது தெரியும்; ஆனால் உங்களிடம் சொல்லாது

ஜூன் 30 அன்று என்ன நடந்தது?

0
1781
கதிராமங்கலத்தில் ஒரு காட்சி

தஞ்சாவூரின் கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) நடவடிக்கைகள் மீதிருந்த அதிருப்தி ஜூன் 30 ஆம் தேதி நடந்த போலீஸ் தடியடிக்குப் பின்னர் கோபமாக மாறியது; நாகப்பட்டினத்தின் குத்தாலத்திலுள்ள ஓ.என்.ஜி.சியின் சுத்திகரிப்பு ஆலைக்கு கதிராமங்கலத்திலிருந்து கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டதற்கு எதிராக போராடிய கிராமத்து மக்களை போலீசார் தடியால் தாக்கியதால் வன்முறை ஏற்பட்டது. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போலீஸ் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்; பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலரும் காவல் துறையின் அத்துமீறலைக் கண்டித்தார்கள். காவல் துறையின் வன்முறையைப் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போது அதைவிட மோசமான “எண்ணெய்க் கசிவு” சம்பவம் வசதியாக மறக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களின் கோபம் பல வருடங்களாக கனன்று கொண்டிருக்கிறது 2001ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தனது பெட்ரோல் கிணற்றுக்காக ஓ.என்.ஜி.சி துரப்பணங்களையும் பெரும் இயந்திரங்களையும் ஜூன் மாத ஆரம்பத்தில் கொண்டு வந்தபோது இந்தக் கோபத்திற்கு திட்டவட்டமான ஓர் வடிவம் கிடைத்தது. இந்த பெட்ரோல் கிணற்றால் நிலத்தடி நீர் மாசுபட்டு தவித்து வந்த கிராம மக்களுக்கு மீத்தேனை உறிஞ்சும் துரப்பண இயந்திரங்கள் வந்தது அச்சத்தை மேலும் அதிகமாக்கியது. மீத்தேனை எடுக்க துரப்பண இயந்திரங்கள் வரவில்லை என்று ஓ.என்.ஜி.சி சொல்கிறது. ஆனால் ஓ.என்.ஜி.சி யின் இரகசிய செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது கதிராமங்கலத்து மக்கள் ஓ.என்.ஜி.சியை நம்பாததில் எந்த வியப்பும் இல்லை.

இங்கு மீத்தேன் சர்ச்சையை விட்டுவிடலாம். எண்ணெய்க் கசிவு நடந்ததைப் பற்றியும் அது பற்றி சொல்லப்படாத உண்மைகளையும் இங்கு பேசுவோம். கசிந்த “எண்ணெய்’’ வஸ்து என்ன? அது என்ன செய்யும்? ஓ.என்.ஜி.சி செய்ய வேண்டியது என்ன? செய்யாதது என்ன? இவையெல்லாம் பேசுவோம். கசிந்த ’’எண்ணெய்’’ பொருளின் தன்மையும்
ஓ.என்.ஜி.சியின் மெளனமும் போலீஸ் லத்திகளைவிட அபாயகரமானவை.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் ஓ.என்.ஜி.சியின் காவேரி படுகை மேலாளர் டி.ராஜேந்திரன் இப்படிச் சொல்கிறார்: “15 சென்ட் விவசாய நிலத்தில் எண்ணெய் பரவி இருக்கிறது. பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நாங்கள் போதுமான நஷ்ட ஈடு வழங்குவோம்.’’

15 சென்ட் அளவுள்ள நிலத்தின் மேற்பரப்பில் ’’எண்ணெய்’’ பரவியிருந்தால் நிலத்தடியில் இதை போல பன்மடங்கு பரப்பில் எண்ணெய் பரவியிருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழலை மீட்போம் என்று ஓ.என்.ஜி.சி சொல்லவில்லை அதே டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் ஓ.என்.ஜி.சியின் காரைக்கால் மேலாளர் குல்பீர் சிங் இப்படிச் சொல்கிறார்: “குழாயின் கீழ்ப்பகுதியில் சிறிய துவாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பற்றிய அறிக்கை ஒன்று இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கப்படும்.”

இந்த அறிக்கை தயாராகும்போது இந்தக் கசிவினால் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் நிலத்தடி நீருக்கும் ஏற்பட்ட சேதாரம் சரிசெய்ய முடியாததாகிவிடும். ஓ.என்.ஜி.சியின் இரகசிய தன்மையை வைத்துப் பார்க்கும்போது இந்த அறிக்கை கடைசிவரை வெளியிடப்படாமல் போகலாம்.

கசிந்த “எண்ணெய்’’ பொருள்

விகடன் வார இதழில் பணிபுரியும் நியாஸ் அகமது கதிராமங்கலத்திலுள்ள மூன்று பெண்கள் பேட்டியளித்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பெண்கள் பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில் கலங்கலான தண்ணீருடன் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்தத் தண்ணீர் தலித் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியிலுள்ள அடிபம்பிலிருந்து பிடிக்கப்பட்டது என்று நியாஸ் என்னிடம் தொலைபேசியில் சொன்னார். அந்தப் பெண்கள் எப்படி இந்தக் கசிவுக்குப் பிறகு வெளியான புகைச்சல் தங்களை வாந்தியெடுக்க வைத்தது என்று விவரித்தார்கள்.

கசிந்த “எண்ணெய்” பார்ப்பதற்கு எப்படி இருந்தது என்ன விதமான வாசனை வந்தது என்பதை அறிவதற்காக அங்குள்ள கல்லூரி செல்லும் இளைஞர் ஒருவரிடம் பேசினேன். அவர் இப்படிச் சொன்னார்: ’’அன்று கசிந்தது எண்ணெய் மட்டுமல்ல; தண்ணீரும் கலந்திருந்தது; அது சந்தன நிறத்தில் இருந்தது. அதன் வாசனை தாங்க முடியாததாக இருந்தது. மூச்சு திணற வைத்தது. வாந்தி எடுக்க வைத்தது. பெட்ரோல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் நெடியை உணர வைத்தது.

அவர் விவரிப்பதை வைத்துப் பார்த்தால் குழாயிலிருந்து கசிந்தது வெறும் கச்சா எண்ணெய் மட்டுமல்ல. பெட்ரோலிய தயாரிப்பில் அபாயகரமான கழிவு என்று கருதப்படுகிற “உற்பத்தி செய்யப்பட்ட நீர்” கலந்தே வந்திருக்கிறது.
அவர் சொன்னது போல அந்த வாடை அவ்வளவு கடுமையாக இருந்திருந்தால் லத்தியை பயன்படுத்திய காவல் துறையினர், ஓ.என்.ஜி.சி அதிகாரிகள், கிராமத்து மக்கள் அனைவருமே அபாயகரமான நச்சுப் புகையை சுவாசித்திருக்கிறார்கள்; இதை நான் விளக்குகிறேன்.

பெட்ரோலியம் எப்போதுமே பாறைப் படிமங்களின் துவாரங்களிலும் அடிப்பகுதியிலும் இயற்கையான நீருடன் கலந்து காணப்படுகிறது. பெட்ரோலியமோ இயற்கை எரிவாயுவோ எடுக்கப்படும்போது எண்ணெய்க் கிணற்றிலுள்ள அழுத்தம் குறைந்து அங்கு தண்ணீர் புகுந்துவிடும். இதனை “உற்பத்தி செய்யப்பட்ட நீர்” அல்லது எண்ணெய் வயல் நீர் என்று சொல்வார்கள். எண்ணெய்க் கிணற்றின் வயது அதிகரிக்க அதிகரிக்க தோண்டப்படும் பெட்ரோலியத்துடன் வரும் நீரின் அளவும் அதிகமாகும். ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு இரண்டு முதல் ஒன்பது பீப்பாய்கள் வரை எண்ணெய் வயல் நீர் உருவாகலாம்.

எண்ணெய் வயல் நீர் அதிக உப்புத் தன்மை கொண்டதாகவும் பொருள்களை அரிக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். இதில் நச்சுத் தன்மை வாய்ந்த பென்ஸீன், ஸைலின் போன்றவையும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற கந்தக வாயுக்களும் கன உலோகங்களான காரீயம், நிக்கல், பாதரசம் போன்றவையும் கதிரியக்கத் தன்மை கொண்ட ரேடியம் போன்றவையும் இருக்கும்.

இந்தக் கசடுகளை கடத்தும் குழாய்கள் அரிக்கப்படும்; குழாய்களுக்குள் உப்பு படியும். இந்தக் கழிவுகளை அபாயகரமானவை என்று அடையாளம் கண்டு கையாள வேண்டும். இவை காற்றில் கலந்து பரவுவது எளிது. இதில் பென்ஸீன் புற்று நோயை உருவாக்கும் வேதிப் பொருள். இது குழந்தைகளில் இரத்தப் புற்றுநோயை உருவாக்கும்.
நச்சுப் பொருட்கள் மற்றும் நோய்களுக்கான அமெரிக்க ஆவணக் காப்பகம் இப்படிச் சொல்கிறது: “ஹைட்ரஜன் சல்பைடு மூச்சுக் குழாயைப் பாதிக்கும்; இதனை அதிகம் சுவாசித்தால் நுரையீரல் பாதிப்பு உண்டாகும். இதைச் சுவாசிக்கும்போது தலைவலி, வாந்தியெடுத்தல், தோல் மற்றும் கண்ணில் எரிச்சல் ஆகியவை உண்டாகும்”. இதைத்தான் ஜூன் 30 அன்று கதிராமங்கலம் கிராமத்து மக்களும் காவல்துறை கண்காணிப்பாளரும் ஓ.என்.ஜி.சி அதிகரிகளும் சுவாசித்தார்கள்.

இலகுவான வாயுக்கள் காற்றில் கரைந்து போயிருக்கும்; கனமான உலோகங்கள், உப்புகள் மண்ணில்தான் இன்னமும் இருக்கின்றன. அவை மெல்ல மெல்ல நிலத்தடி நீரோடு கலந்துவிடும். இதிலுள்ள உலோகங்களில் இருக்கும் நச்சுப் பொருட்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கும். பாதரசம் மூளையையும் சிறுநீரகங்களையும் பாதிக்கும். செலினியம் எலும்புகளைப் பாதிக்கும்; எலும்புகளையும் நகங்களையும் பலவீனப்படுத்தும்; மனச்சோர்வுக்கும் காரணமாக இருக்கும். ஆன்டிமணி உலோகம் மூட்டு வலிகளையும் எலும்புப் பாதிப்பையும் உருவாக்கும். கதிரியக்கத் தன்மை கொண்ட ரேடானைச் சுவாசித்தால் நூரையீரல் புற்றுநோய் ஏற்படலாம்.

நிலத்தைப் பயன்படுத்தும் விவசாயியைப் பொறுத்தவரை அந்த மண் செத்துப் போய்விட்டது; எந்த விளைச்சலையும் தராது; அதை யாரும் விலைக்குக்கூட வாங்க மாட்டார்கள். அந்த மண் அபாயகரமானது என்பதால் கால்நடைகளோ, குழந்தைகளோ அங்கு போகாதபடி வேலி போட்டுப் பாதுகாக்க வேண்டும்; அங்குள்ள நஞ்சை நீக்கிய பிறகுதான் வேலியை அகற்ற முடியும்.

கதிராமங்கலத்திலிருந்து நண்பர் பியூஷ் மனுஷ் பேசினார்; நிலத்தடி நீர் மாசுபட்டு இருப்பதாக ஏராளமான மக்கள் புகார் செய்ததாக அவர் சொன்னார். அதற்கு ஆதாரமாக அடி பம்பில் பிடித்த நீர் கலங்கலாக நிறம் மாறுவதை மக்கள் நேரில் தனக்குக் காட்டியதாக சொன்னார். “அதில் பெரிய வாடை ஒன்றும் வரவில்லை. கொஞ்சமாக வாடை இருந்தது. ஆனால் தண்ணீரைப் பிடித்த கொஞ்ச நேரத்தில் எண்ணெய்ப் படலம் உருவாவது தெளிவாகத் தெரிகிறது’’ என்றார் அவர். கொஞ்சம் கூட பெட்ரோலியம் கிடைக்காததால் கைவிடப்பட்ட பல கிணறுகள் அங்கே இருப்பதாக பியூஷ் சொன்னார். அந்தக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும்.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் பிரச்சனை மிக மோசமாக இருக்கிறது. எண்ணெய்க் கிணறுகள் என்பவை ஆழமிக்க ஆழ்துளைக் கிணறுகள்; அவற்றின் உட்சுவர்கள் எதுவும் புக முடியாத பொருட்களால் கட்டப்பட்டவை; இதனால் பெட்ரோலியமோ எண்ணெய் வயல் நீரோ அருகிலுள்ள நீரோட்டங்களுக்குச் சென்றுவிடாமல் தடுக்கப்படுகிறது. சர்வதேச அளவில் இதேபோன்ற எண்ணெய்க் கிணறுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருப்பதற்காக தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். விரிசல் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக அது சரி செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் பாதிப்பு என்பது பியூஷிடம் பேசிய மக்கள் சொன்னதுபோல அதிக அளவில் இருந்தால் இந்தப் பிரச்சனையை சமாளிப்பது கடினம். நிலத்தடி நீரை மீட்டெடுப்பது அதிக செலவும் நேரமும் தேவைப்படுகிற பணி. மக்கள் இந்த நீரின் மாசுத்தன்மையை அறிந்து அது சரி செய்யப்படும்வரை வேறு நீர் ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் ஓ.என்.ஜி.சி பெரும் தவறுகளைச் செய்திருக்கிறது.

1 பெட்ரோல் உற்பத்தி மற்றும் அதைப் போக்குவரத்து செய்வது ஆகியவற்றைப் பற்றி மக்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை.
2 கச்சா எண்ணெயிலும் எண்ணெய் வயல் நீரிலும் இருக்கும் வேதிப் பொருட்களைப் பற்றி மக்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. அதன் நச்சுத்தன்மையிலிருந்து மக்கள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் எதுவும் தெரிவிக்கவில்லை.
3 நிலத்தடி நீரின் அளவையும் தரத்தையும் அறிவதற்கு கண்காணிப்புக் கிணறுகளையும் நிறுவவில்லை; நிலத்தடி நீர் மாசுபடுகிறதா என்பதை உறுதி செய்ய எதுவும் செய்யவில்லை.
4. கசிவை மேலாண்மை செய்வதற்காக எந்தத் திட்டமும் வகுக்கவில்லை.
5. ஜூன் 30 அன்று நடந்த நச்சு வெளியேற்றம் போன்ற நிகழ்வின்போது மாவட்ட நிர்வாகம், காவல் துறை, ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் செய்ய வேண்டியது என்ன? எந்தப் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும் ஆகியவற்றைப் பற்றி எந்த வழிகாட்டுதலும் இல்லை.

இந்த நச்சு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வரவழைக்கப்படவில்லை. காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் வந்திருந்தார்கள். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இதில் எந்தப் பங்கும் இல்லை.

நடந்த பாதிப்பை ஓரளவேனும் சரி செய்வதற்கு அரசாங்கம் விரும்பினால் கீழ்க் கண்டவற்றை உடனே செய்ய வேண்டும்.
1 கசிவு நடந்த இடத்திற்கு வேலி போட வேண்டும்.
2 மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின்படி அபாயகரமான கழிவுகளைக் கையாள்வதால் உண்டாகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.
3 பாதிக்கப்பட்ட இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.
4 நிலத்தடி நீரின் தரத்தைக் கண்காணிக்க வேண்டும். மாசுபட்ட எல்லா கிணறுகளையும் மூட வேண்டும்.
5 மாசுபட்டிருக்கும் எல்லா நிலத்தடி நீரோட்டங்களையும் ஓ.என்.ஜி.சி சுத்தம் செய்ய வேண்டும்.
6 நச்சுக் கசிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் கிணறுகளின் உரிமையாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
7 கசிவு வெளியான கிராமத்து மக்களின் உடல் நலத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்; அதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
8 இதைப் போன்று கசிவு ஏற்பட்ட பிற பகுதிகளை அடையாளம் கண்டு மேற்கூறிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்