நடிகைகள் குறித்து கண்ணியக்குறைவாகப் பேசிய ராதாரவியை நாங்கள் தயாரிக்கும் படங்களில் பயன்படுத்த மாட்டோம் என தயாரிப்பாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.

ராதாரவியின் மேடைப்பேச்சுகள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியவை. கேலியின் தொனியில் அவர் சொல்லும் கண்ணியக்குறைவான கமெண்ட்களை ரசிக்கும் போக்கு சமீபமாக அதிகரித்துள்ளது. யூடியூபில் அந்தப் பேச்சுகள் அதிகளவில் பார்க்கப்படுகின்றன.

கொலையுதிர்காலம் படவிழாவில் கலந்து கொண்ட ராதாரவி அப்படத்தின் நாயகி நயன்தாராவையும், பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவங்களையும் கண்ணியக்குறைவானவிதத்தில் விமர்சித்தார். அந்தப் பேச்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், சிரித்தும், கைத்தட்டியும் வரவேற்றது இன்னொரு பேரவலம்.

ராதாரவியின் பேச்சை கண்டிக்கும்விதத்தில், அவர் சார்ந்துள்ள திமுகவிலிருந்து அவரை தற்காலிகமாக நீக்கியிருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் ராதாரவியை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அறம் படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ், ராதாரவியின் பேச்சை கண்டித்ததோடு, தங்களது நிறுவனம் தயாரிக்கும் படங்களில் ராதாரவியை பயன்படுத்துவதில்லை என்று அறிவித்துள்ளார். இப்போதாவது நாம் செயல்பட வேண்டும் என அவர் திரைத்துறைக்கு அறைகூவலும் விடுத்துள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்களை, நடிகைகளை கண்ணியக்குறைவாகப் பேசுவதை ராதாரவி வழக்கமாக கொண்டிருக்கிறார். இத்தனை நாள் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே திரைத்துறையின் பெரும் தவறாகும்.

ராதாரவிக்கு நமது கண்டனங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here