கண்டனம்

Ippodhu condemns the arrest of Cartoonist Bala

0
364
இந்தக் கார்ட்டூனுக்காகத்தான் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்

கார்ட்டூனிஸ்ட் பாலா, தமிழ்ச் சமூகம் மீது கரிசனம் கொண்ட கேலிச் சித்திரக்காரர்; மக்களின் நியாயமான கோபத்துக்கு வடிவம் கொடுப்பவர்; நகைப்பைவிட, எள்ளலைவிட அதிகாரத்தை நோக்கி கோபமாக உண்மையைப் பேசும் பாணி அது; இந்திய அரசியல் சாசனத்தின் 19 (1) பிரிவு வழங்குகிற பேச்சு சுதந்திரத்துக்குள், அதன் நீட்சியான ஊடக சுதந்திரத்தின் வரையறைக்குள் கச்சிதமாக பொருந்திப் போகிற ஊடகச் செயல்பாட்டாளர் பாலா. கந்து வட்டிக் கொடுமையால் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்புச் சம்பவத்தில் இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அக்ஷயா பரணிகா ஆகியோர் அக்டோபர் 24, 25ஆம் தேதிகளில் உயிரிழந்தார்கள். போலீஸுக்கு மனுக்கள் அளித்தும் மாவட்ட ஆட்சியருக்கு மனுக்கள் அளித்தும் கந்து வட்டிக் கொடுமையைத் தடுக்கவில்லை என்பதே இந்தச் சம்பவத்துக்கு இசக்கிமுத்துவின் குடும்பம் சொன்ன காரணம். செவி கொடுக்காத அரசின் மீதுள்ள மக்களின் கோபத்தை எரியும் குழந்தையின் முன்பு அம்மணமான சாட்சிகளாக இருக்கும் முதலமைச்சராகவும் மாவட்ட ஆட்சியராகவும் காவல் துறை ஆணையாளராகவும் சித்தரித்துள்ளார் பாலா. மக்களின் கோபத்தைச் சொல்லும் கார்ட்டூனிஸ்ட் அரசாங்கத்தை ஜனநாயக வழிகளில் நெறிப்படுத்தி உதவுகிறார். இந்த உண்மையைப் புரிந்துகொள்ள தமிழக அரசு முன்வர வேண்டும்.

ஊடக சுதந்திரம் அதல பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் இந்தியச் சூழலில் பாலாவின் கைது ஊடகங்களை இன்னும் வேகமாக படுகுழிக்குள் தள்ளுகிற சர்வாதிகார நடவடிக்கை; இந்த அராஜகம் பிற ஊடகவியலாளர்களை அடிமைப்படுத்துகிற, அச்சுறுத்துகிற உள் நோக்கம் கொண்டது; மிகவும் தவறான முன்னுதாரணம் இது. ஊடக சுதந்திரத்தின் மீதான இந்த அப்பட்டமான தாக்குதலை இப்போது டாட் காம் வன்மையாக கண்டிக்கிறது. சுதந்திரமும் சுயமரியாதையும் ஓங்கியிருந்த தமிழ் பூமியில் இன்று அரச ஒடுக்குமுறையும் அரச அத்துமீறலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இது ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல; இந்த அகங்காரத்தை மக்கள் வீழ்த்துவார்கள்.

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள CLICK HERE பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்