இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இந்தாண்டு ஐபிஎல் சீசனாக உள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த நிலையில் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் ஏராளமான போட்டிகள் நடைபெறவுள்ளன. வரும் 10ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 10 ஆட்டங்கள் நடைபெறுகிறது. 10ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனாவின் 2ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் மும்பை மைதான ஊழியர்கள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சில வீரர்களுக்கும் சென்னை அணியின் நிர்வாகி ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், திட்டமிட்டப்படி மும்பையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கு நடைபெற உள்ள போட்டியை ஐதராபாத் அல்லது இந்தூரில் நடத்தலாமா என்று பிசிசிஐ ஆலோசனை நடத்தியது.
இதற்கிடையே கொரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்று கருதப்பட்டது.

இந்தநிலையில் கட்டுப்பாடுகளுடன் மும்பையில் ஐ.பி.எல். போட்டியை நடத்த மகாராஷ்டிரா மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் கூறியதாவது:- ஐ.பி.எல். போட்டி நடத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்படும். கொரோனா பாதுகாப்பு வளையத்தை வீரர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கூறினார்.