தேர்தலில், வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும் என வலியுறுத்தி பிஜேபி எம்பி ஜகதாம்பிகா பால் தாக்கல் செய்த தனிநபர் மசோதாவுக்கு, (Compulsory Voting Bill ) மக்களவையில் உறுப்பினர்கள் சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

கடந்த, 2015ம் ஆண்டு தேர்தல் சீர்திருத்தம் பரிந்துரையில், கட்டாய ஓட்டுப்பதிவு என்பதை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனால், வாக்காளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என தெரிவித்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று கட்டாய ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் விதத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆளும் பா.ஜ.க. தரப்பில் இருந்தே, அதிக எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ.க. எம்.பி.,யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜிவ் பிரதாப் ரூடி பேசுகையில், ”தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் ஓட்டளிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. அனைவரும் ஓட்டளித்தால் தான், நாட்டில் வளர்ச்சி ஏற்படும் என கூறுவதை ஏற்க முடியாது. 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு இந்தியா, இப்போது தயாராக இல்லை. 100 சதவீத ஓட்டு என நிர்பந்திப்பதே ஆபத்தானது,” என்றார். இவருக்கு ஆதரவாக ராஜேந்திர அகர்வால் (பா.ஜ.க.) மஹ்தப் (பிஜு ஜனதா தளம்) ஆகியோர் கருத்து தெரிவித்தனர். பா.ஜ.க.வை சேர்ந்த இன்னொரு எம்.பி., நிஹால் சந்த், ”100 சதவீத ஓட்டுப்பதிவு அவசியம். தேர்தல் என்பது செலவினம் மிக்க செயலாக மாறிவிட்டது,” என்றார். இவருக்கு ஜகதாம்பிகா பால் உள்ளிட்ட எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்தனர். 

பிறநாடுகளில் கட்டாய வாக்குரிமை
இந்தியாவைப் போல் தேர்தலில் வாக்களிக்காமல் ஆஸ்திரேலியாவில் ஒதுங்க முடியாது. கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதும், தவறினால் தண்டனை என்பதும் விதி. கடந்த தேர்தல் அந்நாட்டில் 91 சதவீத வாக்குகள் பதிவானது. கட்டாய வாக்குமுறை உலகில் பெல்ஜியம், ஆஸ்திரேலியா, செக்கோஸ்லோவாக்கியா, மெக்சிக்கோ  என 30க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. இங்கேயும் கட்டாய வாக்குமுறையை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை நெடுங்காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. வாக்களிக்காதவர் தக்க காரணம் காட்டவில்லையென்றால் அபராதமோ, சிறைத் தண்டணையோ விதிக்கப்படுகிறது.

20 நாடுகளில் அதிபர் தேர்தலும், 7 நாடுகளில் நாடாளுமன்ற தேர்தலும், 29 நாடுகளில் பொது தேர்தலும்  நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 90 கோடி பேர் வாக்களார்கள். தேர்தல் நடக்க இருக்கும் மற்ற 55 நாடுகளின் மொத்த மக்கள் தொகையே 120 கோடி தான்.  ஆட்சிமுறை என்பது முழுமையான ஜனநாயகம், குற்றமுள்ள ஜனநாயகம், கலப்பு ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் கொண்ட ஜனநாயக நாடுகள் பட்டியலில் ஜப்பான், போர்ச்சுகல், பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, பிரேசில், மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் இந்தியா, இந்தப் பட்டியலில் 41வது இடத்தில் உள்ளது. 

ஜனநாயகத்தை நார்வே, அயர்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து, டென்மார்க், கனடா, பின்லாந்து, சுவிட்ச்ர்லாந்து ஆகிய நாடுகள் முழுமையாக கடைபிடித்து வருகின்றன. இந்த பட்டியலில் நார்வே முதலிடம் வகிக்கிறது. ஜனநாயக முறையில் தேர்தல் என்பதில், தமிழகம் ஆதிகால முன்னோடி என்பதற்கு சாட்சி குடவோலை முறை. அதை இன்றும் பறைசாற்றுவது உத்திரமேரூர் கல்வெட்டு. பல பிரதமர்களை உருவாக்கிய தமிழர்கள்(King Makers)  யாரும் அந்தப் பதவியை அலங்கரிக்கவில்லை என்பது வருத்தபட வேண்டிய உண்மை.

இந்தியாவைப் பொருத்தவரை கட்டாய வாக்களிப்பு சாத்தியமில்லை. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற யோசனை உலக அளவில் பல நாடுகளில் முன் வைக்கப்பட்டு வருகிறது. என்றாலும் அதனை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்ற கருத்தை தேர்தல் ஆணையமே பலமுறை முன்வைத்துள்ளது.

எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் ஆரோக்கியமான ஜனநாயகம் என்பது அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை மட்டுமல்ல, வாக்களிக்கும் வாக்காளர்களையும் பொறுத்தது. நம் நாட்டில் அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் விமர்சிக்கும் அளவிற்கு வாக்காளர்களின் பங்கு விமர்சிக்கவோ, விவாதிக்கவோ படுவதில்லை.

வாக்களிப்பது என்பது ஏதோ நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள சலுகை என்றோ, நாம் அரசியல் கட்சிகளுக்குச் செய்ய வேண்டிய உதவி அல்லது கடப்பாடு (obligation) என்றோ எண்ணுகிற வாக்காளர்கள் நம் நாட்டில் கணிசமாக இருக்கிறார்கள். வேட்பாளர்கள் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக அவர்களில் பலர் வாக்குச்சாவடிப் பக்கமே வருவதேயில்லை. அதைவிட மோசம், அவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்வதில்கூட ஆர்வம் காட்டுவதில்லை.

இந்தக் கடமைகளைச் செய்யாமல் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து, அரசியல் என்பது சாக்கடை என்றெல்லாம் திண்ணைப் பேச்சு பேசிக் கொண்டிருப்பதால் யாருக்கும் பயனில்லை. அந்தப் பேச்சுக்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. வேடிக்கை பார்ப்பவர்கள் எதையும் மாற்றியதாக வரலாறு இல்லை.

இது போன்ற சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்பட வேண்டிய நமது தேர்தல் ஆணையர்கள் கட்டாய வாக்கு என்பது நடைமுறை சாத்தியமற்றது என்று அறிவித்து தட்டிக் கழித்திருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகமும், கட்டாயமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியாது என்று அவர்கள் வாதிட்டிருப்பது வியப்பாக இருக்கிறது.

70 கோடி வாக்காளர்களைக் கொண்ட நமது நாட்டில் 30 கோடி பேர் வாக்குச்சாவடி பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை என்று ஒரு புறம் குறைபட்டுக் கொள்கிற தேர்தல் ஆணையர்கள் இந்த குறையை போக்க கட்டாய வாக்குமுறை ஓரளவு உதவும் என்பதை மறந்து விட்டு பொறுப்பை தட்டிக் கழித்திருக்கிறார்கள்.

குஜராத்தில் கட்டாய வாக்களிப்பு சட்டம் – 2009?

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்று என்று அன்றைய தலைமை தேர்தல் ஆணையர் நவின் சாவ்லா கூறினார். புதுடெல்லியில் நடைபெற்ற தேர்தல் ஆணையத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய சாவ்லாவிடம், குஜராத் மாநில அரசு உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வந்துள்ளதை பற்றி கேட்டனர்.

ஓட்டளிப்பதை கட்டாயமாக்கி குஜராத் மாநில சட்டமன்றத்தில் சட்டம் 2009 ஆம் ஆண்டு (The Gujarat Local Authorities Laws (Amendment) Act, 2009) நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதா முன்பு இரண்டு முறை சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டு முன்பு இருந்த கவர்னர் கமலா பெனிவாலால் நிராகரிக்கப்பட்டது. அதன்பின், மத்திய அரசால் புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் ஓ பி கோலி இந்த புதிய சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கினார். ஆனால் அந்த சட்டத்தை செயலாக்கத்திற்கு 2015ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜயந்த படேல் மற்றும் NV அஞ்சாரியா அமர்வு தடைவித்தது.

கட்டாய வாக்குப்பதிவு அவசியமா?

கட்டாய வோட்டு – மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம் என்போரும் உண்டு. கட்டாய வாக்களிப்பு என்பது சமூகத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் பிரிவினருக்கு சாதகமாக அமைந்துவிட வாய்ப்புண்டு. அதனால் மத, இன, மொழிச் சிறுபான்மையோரின் குரல்கள் சட்டமியற்றும் மன்றங்களில் ஒலிக்க வகை செய்யும் விதத்தில், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்திவிட்டுப் பின் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கலாம். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் கட்சிகள் வாங்கும் வாக்குகளின் சதவிகிதத்திற்கேற்ப சட்டமன்ற, நாடாளுமன்றத்தில், பிரதிநிதிகளின் எண்ணிக்கை அமையும் என்பதால் சிறிய கட்சிகளும், பெரும்பான்மை மக்களின் கருத்துக்களிலிருந்து மாறுபட்டு நிற்பவர்களும் இடம் பெற இயலும்வாக்கை பதிவு செய்வது என்பது வெறு ஒரு அரசியலமைப்பு உரிமை மட்டுமல்ல, அது நம் நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரு கடமை ஆகும். வாக்களிப்பது இந்தியாவின் அனைத்து வயதுவந்த குடிமக்களும் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்றாகும். நாம் இந்த சட்டத்தை பெருமையுடன் செயல்படுத்தி கடைபிடிக்க வேண்டும். 

கட்டாய வாக்குப்பதிவை நடைமுறைபடுத்துவது எப்படி?

கட்டாய ஹெல்மெட் விதிகளை அமல்படுத்த முடிந்த அரசால் கட்டாய வாக்களிப்பை செய்யமுடியாது என்பது ஏற்கக்கூடியதல்ல. அரசியலமைப்புச் சட்டம், அடிப்படைக்கடமைகள், பகுதி-4A-இல் கூறுகிறது. இந்த அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் சேர்க்கப்பட்டது. அதில் கட்டாய வாக்களிப்பையும் சேர்த்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்தால் இதை முழு சட்டவடிவமாக்கலாம்.

Courtesy: DN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here