கடை, நிறுவனப் பணியாளர்களுக்கு இருக்கை கட்டாயம் – சட்ட மசோதா தாக்கல்

0
286

தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அமர்ந்து கொண்டு பணியாற்றும் வகையில் இருக்கையை கட்டாயமாக்கும் சட்ட முன்வடிவு பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் வேலை நேரம் முழுவதும் நின்று கொண்டே பணியாற்றுவதைத் தடுத்து, அவர்களுக்கு இருக்கையை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான சட்ட முன்வடிவை இன்று தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக, இது குறித்து தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் அளித்த விளக்கத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுக்க நிற்க வைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன் விளைவாக பணியாளர்கள் பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகிறார்கள்.

இதனைக் கருத்தில் கொண்டு, கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்குவது கட்டாயம் என்று தமிழக அரசு கருதுகிறது.

கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்கும் பொருட் கூறானது முன்வைக்கப்பட்டது. அது குழுவின் உறுப்பினர்களால் ஒத்தக் கருத்துடன் ஏற்கப்பட்டது.

எனவே, அரசானது மேற்சொன்ன நோக்கத்துக்காக 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் ஏற்றவாறு திருத்தம் செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

\

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here