கடைசி மூச்சு வரை அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் எனக் கூறி வந்த பாரதிய ஜனதா கட்சி, தற்போது கட்டுமான துறை மற்றும் ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதியளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்டுமான துறை மற்றும் ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தில் 49 சதவிகிதம் வரை அந்நிய முதலீட்டிற்கும் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்தது. இதற்கு தற்போதைய மத்திய நிதியமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான அருண்ஜேட்லி, “நுகர்வோர், விவசாயிகள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் நாட்டிற்கும் பாதிப்பை உண்டாக்கும் வகையில் அந்நிய நேரடி முதலீடு உள்ளது. அதனால் கடைசி மூச்சு வரை பாரதிய ஜனதா கட்சி அந்நிய நேரடி முதலீட்டை எதிர்க்கும்” என கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதியன்று பேசியிருந்தார். இது தொடர்பான செய்தியை தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அதேபோன்று, 2012ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அந்நிய நேரடி முதலீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக சாடியிருந்தார். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்