தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒருமையில் பேசியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்துக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா அளித்த பேட்டியில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா எவ்வளவு மோசமாக விமர்சனம் செய்தார். அதற்காகவெல்லாம் நாங்கள் கூட்டணி அமைக்காமல் இல்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக கூட பதவியில் அமர்ந்தார்.

எங்கள் தயவில் அன்று ஆட்சியைப் பிடித்த அதிமுக, இன்றளவும் ஆட்சியில் இருப்பது எங்கள் தயவில்தான். ஒரு கட்சியின் மீது விமர்சனம் செய்தால், அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று அர்த்தம் கிடையாது.

எனவே, வரவுள்ள மக்களவைத் தேர்தல் கூட்டணியில் தெளிவாக இருக்கிறோம். இழுபறி எதுவும் இல்லை. எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதிகள் என்பன உள்ளிட்ட விவரங்கள் இறுதி செய்யப்பட்டு அடுத்த இரண்டு நாள்களில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

37 மக்களவை உறுப்பினர்களை வைத்திருந்த அதிமுக தமிழகத்துக்கு எந்தவிதமான திட்டங்களையும் கொண்டுவரவில்லை. அந்த 37 உறுப்பினர்களால் தமிழகத்துக்கு ஒரு பயனும் ஏற்படவில்லை. அந்த விமர்சனத்தில் நான் இப்போதும் உறுதியாகத்தான் உள்ளேன். ஆனால், விஜயகாந்த் எங்கே உள்ளாரோ அங்கே நல்ல பணிகளை நடைபெற வைப்பார் என்றார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவின் 37 எம்.பி.க்களால் தமிழகத்திற்கு என்ன பயன் கிடைத்தது என்ற பிரேமலதாவின் பேச்சு ஏற்க முடியாதது என்றும், செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் ஒருமையில் பேசியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. தேமுதிக விவகாரத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை. சிலர் பொறுமை இழந்து ஊடகங்களில் பேட்டி அளிக்கின்றனர்.

எம்ஜிஆர் சொன்னதுபோல் அனைவருக்கும் பொறுமை வேண்டும் என்றவர், கடுமையாக விமர்சித்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்பதே எங்களின் கொள்கை. 

மத்திய ஆட்சியில் பங்கேற்றால் தான் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க முடியும். தேமுதிகவுடனான கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலேயே தலைமை செயலகத்தில் முதல்வரை கே.சி.பழனிசாமி சந்தித்தார். இதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்தார். 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here