ஞாயிற்றுக்கிழமை காலையில் நாளிதழைத் திறந்ததுமே மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், எம்.வி.முத்துராமலிங்கம். வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் உரிமையாளரான இவர் தி இந்து தமிழ் திசையின் முதல் பக்கத்தில் முழுப் பக்க விளம்பரம் ஒன்றைத் தந்திருந்தார். “முருகனின் அருளாலும் அல்லாவின் கருணையாலும் ஏசு கிறிஸ்துவின் ஆசீர்வாதத்தாலும் பெரும் மருத்துவமனை ஒன்றைத் தொடங்குவதாக அதில் அறிவித்திருந்தார். 550 படுக்கைகளை வசதி படைத்தவர்களுக்கும் 1000 படுக்கைகளை ஏழைகளுக்கும் அர்ப்பணிப்பதாக அந்த விளம்பரத்தில் சொல்லியிருந்தார். இதைப் பார்த்ததும்,
பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே.
என்று பள்ளிக்கூடத்தில் படித்த வள்ளலார் பாட்டு என் நினைவுக்கு வந்தது. எல்லா மார்க்கங்களும் கடவுளென்னும் கடலைத் தேடிச் செல்கிற நதிகள்தான் என்று இதில் வள்ளலார் பாடிச் செல்கிறார். இதற்கு அவ்வை சு.துரைசாமிப் பிள்ளை எழுதியுள்ள உரை இது: பலவகைச் சமயமென்னும் நதிகள் புகுந்து கலந்தும் நிறைவாய், ஓங்கும் கங்குகரை காணத கடலாய், எங்கும் கண்ணாகக் காணும் கதியாய், அன்பர் மயற்கோடை தணிக்கும் தருவாய், பூந்தடமாய், ஞானக் குமுதம் மலர்த்தும் மதியாய், எல்லாம் செய்ய வல்லனாவன் தேவதேவன். அறியாமையால் மயங்கி மனம் வெதும்பி வருந்துங்கால் அறிவொளி நல்கிக் குளிர்விக்கும் நலம் பற்றி “மயற் சோடையெல்லாம் தணிக்கின்ற தருவே” என்று கூறுகிறார். நிழல் மரமேயன்றிப் பூக்கள் நிறைந்த பொய்கையும் கோடை தணிக்கும் திறத்தனவாதலால் பூந்தடத்தை உடன் கூறுகின்றார். செங்குமுதம்-செவ்வல்லி; வெண்குமுதமும் உண்டாயினும், செம்மை மனத்துக்கு உவமம் செய்தலின் செங்குமுதம் எனல் வேண்டிற்று. குமுதம் இரவில் நிலவொளியில் மலர்வது. மனத்தை அருள் ஒளியால் மலரச் செய்வதுபற்றி ‘மலர வரும் மதி’ என்கின்றார்.
சமய நல்லிணக்கச் சிந்தனையை மக்களிடையே பரவலாக்கும் முயற்சியில் இப்போது டாட் காம் ஈடுபட்டிருக்கிறது; விசிஷ்ட அத்வைதம் பற்றியும் பீரப்பாவின் மெய்ஞானச் சரநூலைப் பற்றியும் இப்போது டாட் காம் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகள் சென்னையில் 2019ஆம் ஆண்டு ஜனவரியில் அரங்கேறவுள்ளன. ஆன்மிக அன்பர்கள் இது பற்றிய அறிவிப்புகளை இப்போது டாட் காமில் எதிர்பார்க்கலாம்.

பெருமாள் எப்படி வருவார்?

திருக் குர் ஆனின் இந்த வசனங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here