கடலூரில் காணாமல் போன ஏரி : கண்டு பிடித்த அரசு அதிகாரிகள்

0
143

கடலூரில் 60 ஏக்கர் ஏரியைக் காணவில்லை என்ற அதிர்ச்சிக்குரிய சம்பவம் உண்மையில் நடந்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, மாவட்ட ஆட்சியர்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள நிர்நிலைகளை கண்டறிந்து பாதுகாக்கும்படி உத்தரவிட்டது. எனவே நீர்நிலைகளை கண்டறியும் சோதனையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 

இதன் அடிப்படையில் கடலூர் ஆட்சியர் நீர்நிலைகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். அப்போது தான் கடலூர் மாவட்டம் சி.என்.பாளையம் எனும் கிராமத்தில் அரசு ஆவணங்களில் இடம்பெற்றுள்ள 60 ஏக்கர் பாளையம் ஏரி காணமல் போயுள்ளது தெரியவந்தது. அந்த கிராமத்தின் நிர்வாக அலுவலர் சுமார் 3 நாட்களாக தேடியும் ஏரியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், வியாழக்கிழமை துணை-ஆட்சியர், தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் அப்பகுதியை தீவிரமாக சோதனை செய்தனர். அப்போதுதான் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே அந்த ஏரியில் அந்த கிராமத்தினர் விவசாயம் செய்து வந்த விபரம் தெரிந்தது.

விவசாய நிலமாக மாறியிருந்த அந்த ஏரியின் 60 ஏக்கர் நிலப்பரப்பில் 40 ஏக்கரில் நெல் மற்றும் 20 ஏக்கரில் கரும்பு ஆகியன பயிரிடப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு விவசாயம் செய்திருந்த விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்ட நிலையில், அறுவடை முடிந்ததும் ஏரி இருந்த அந்த இடத்தை விட்டுத்தருவதாக விவசாயிகள் உறுதியளித்தனர்.